Monday, June 13, 2011

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை.


இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்தியா தெரிவித்த யோசனைகளை இலங்கை நிராகரித்துவிட்டது என அந்நாட்டிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலம் மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே, இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பணியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைப்பது என அதிபர் ராஜபட்ச திட்டமிட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு அதிபர் ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கையில் வாழும் தமிழர்கள் பிரச்னைக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு காணுமாறு இந்தியா சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது.

இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டின்படி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்காக 1987-ம் ஆண்டே 13-வது அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈழத் தமிழர் பகுதிக்கு சுய அதிகாரம் அளிப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது என்று சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன் கூறினார்.

ஆனால், இந்தியக் குழுவினர் சனிக்கிழமை மாலை இந்தியா திரும்பிய பிறகு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியமான அரசியல் அதிகாரங்கள், வசிப்பிடங்கள் மீதான அதிகாரம் ஆகியவற்றை மாகாண அரசுகளுக்கு விட்டுத் தர முடியாது என்று இந்தியக் குழுவினரிடம், இலங்கை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

காவல்துறை மற்றும் நிலம் மீதான அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது, இந்தியா அளித்த யோசனைக்கு எதிராக அமைந்துள்ளது. இது இரு நாட்டு அரசியல் தலைமைக்கு இடையே நெருடலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ""சண்டே டைம்ஸ்'' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் ராஜபட்ச மற்றும் இந்தியக் குழுவினருடனான பேச்சு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்த் இடம்பெற்றிருந்தார்.

மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு ராஜபட்ச கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கெனவே மாகாணக் கவுன்சில்கள் அதிகாரமின்றி செயலற்று உள்ளன.

மத்திய மாகாணக் கவுன்சில் கூட்டு அதிகாரம் வழங்குவதற்கு தமது அரசு தயாராக உள்ளதாக இந்தியக் குழுவிடம் அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாகத் தெரிகிறது.

தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதால் இவ்விரு பகுதிகளிலும் நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ராஜபட்ச அப்போது சுட்டிக் காட்டியதாகவும் ""டைம்ஸ்'' தெரிவிக்கிறது.

ஆனால் செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக அரசியல் சாசன திருத்த சட்டத்தை இலங்கை அமல்படுத்தும் என்று நம்புவதாக சிவசங்கர் மேனன் குறிப்பிட்டிருந்தார். சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு அரசியல் மூலமான தீர்வுதான் சிறந்ததாக இருக்கும் என்று இந்தியக் குழுவினர் வலியுறுத்தியதாக மேனன் குறிப்பிட்டார்.

கடந்த மாதம், இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா சற்று கடுமையாக குறிப்பிட்டிருந்தது. அத்துடன் அங்கு நிலவும் நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் யோசனையை, இந்தியக் குழு தில்லி திரும்புவதற்குள்ளாகவே இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை செல்ல பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார். இவரது பயணம் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்த வகையில் தீர்வாக அமையும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments: