Monday, June 13, 2011

கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி எங்கே - சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ. 214 கோடி பணத்தைத்தான் கலைஞர் டிவி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே. அதை சிபிஐ கைப்பற்றியுள்ளதா என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது.

சினியுக் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் கலைஞர் டிவியின் பங்குதாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சிபிஐக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பித்தனர்.

கனிமொழி, ராசாவுடன் இணைந்து சதி செய்து சினியுக் நிறுவனம் மூலமாக பெற்றதாக கூறப்படும் லஞ்சப் பணம் ரூ. 214 கோடி எங்கே?. அந்தப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

கனிமொழி மீதான வழக்கு விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். கனிமொழியிடம் விசாரணை முடிந்து விட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

தொலைத் தொடர்புத்துறையில் நடந்ததாக கூறப்படும் இந்த மிகப் பெரிய ஊழலால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட அளவை சரியாக குறிப்பிட வேண்டும்.

அப்போது கனிமொழியின் வக்கீல் குறுக்கிட்டு ஏதோ கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நீதிபதிகள், மனித உரிமை மீறல்களிலேயே மிகவும் மோசமானது ஊழல்தான் என்றனர். இதையடுத்து கனிமொழியின் வழக்கறிஞர் அமைதியானார்.

பின்னர் நீதிபதிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின், விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments: