Monday, June 13, 2011

எனது நற்பெயரை கெடுக்க காங்கிரஸ் சதி சோனியாவுக்கு ஹசாரே கடிதம்.


பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் முகமூடி என்று கூறி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்வதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்கள் கூறும் பொய்களை நிரூபிக்கத் தயாரா என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மூன்று பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது பொதுமக்கள் அளித்த ஆதரைவைப்போல, வருங்காலத்தில் எனக்கு அவர்கள் ஆதரவளித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் சதி இது.

பொறுப்புமிக்க பதவியில் உள்ள உங்கள் கட்சித் தலைவர்கள் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இருந்தால், அதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கட்டும்.

பதவியில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொய்க்குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

எனது 73 ஆண்டுகால வாழ்க்கையில், எந்தக் கட்சியிடனும், அமைப்புடனும் எதற்காகவும் கூட்டு சேர்ந்ததில்லை. ஏனென்றால் அனைத்து இடங்களிலுமே ஊழல் நிறைந்துள்ளது என்றார் அவர்.

மேலும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடுகையில், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உண்மையானால், நரேந்திர மோடியின் அரசை குறைகூறியிருப்பேனா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதவாத அமைப்புகள் எதுவும் பங்கேற்காவிட்டால் தான் ராம்தேவின் போராட்டத்தில் பங்கேற்பேன் என்று ஏற்கெனவே நான் தெளிவுபடுத்தியிருந்தேன்.

அதேபோல் ஜந்தர் மந்தரில் நான் மேற்கொண்ட போராட்டத்தில் எந்தக் கட்சியும் பங்கேற்கவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள், தாங்களும் அறிவீர்கள். அவ்வாறு இருக்கும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது முறையா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 16-ம் தேதி லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். இதற்காக எனது வாழ்வை தியாகம் செய்யவும் தயாராகி விட்டேன்.

சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், எங்கள் குழுவினர் மீதான நம்பகத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே கூறப்படுபவை.

அப்படித்தான் அரவிந்த் கேஜ்ரிவால் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் முறைகேடாக சொத்து சேர்த்துள்ளார் என்பதை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments: