Monday, June 13, 2011

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை திருடி மும்பையில் விற்பனை?


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கலெக்டர் சகாயத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து உதவி கமிஷனர் வெள்ளைத்துரை தலைமையில் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுப்பிரமணியன், தங்கையா, விசுவாசம், ராமலிங்கம் ஆகிய 4 பேர் சிக்கினர்.

இவர்களிடம் விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது சுப்பிரமணியன் செல்போனுக்கு ஒரு அழைப்புவந்தது. அதில் பேசிய ஒரு பெண், குழந்தை எப்போது கிடைக்கும், உடனே புறப்பட்டு வரவா? என்று கேட்டார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அந்த பெண்ணை அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு இடத்திற்கு வர சொல்லும்படி சுப்பிரமணியனிடம் போலீசார் சொல்ல சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த அந்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட பெண் பெயர் கற்பகம், சென்னையை சேர்ந்தவர். அவர் கூறியதாவது:-

என் கணவர் தலைமை செயலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுக்க மதுரை வந்தேன். அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்களின் உதவியாளராக பணியாற்றி வந்த அமிர்தவள்ளியை பார்த்து விபரத்தை கூறினேன்.

அவர் புரோக்கர் சுப்பிரமணியனை பார்க்க சொன்னார். அவரை பார்த்து பேசினேன். ஆண் குழந்தைக்கு 7 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறினார். நானும் சம்மதித்து முன் பணமாக ரூ.201 கொடுத்தேன். அதை வாங்கி கொண்ட சுப்பிரமணியன் மீதி பணத்தை 12-ந்தேதி அன்று கொடுத்து விட்டு ஆண் குழந்தையை பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை கேட்ட போது, குழந்தையைதராமல் என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை சுப்பிரமணியனும், அமிர்தவள்ளியும் தாக்கி பறித்து கொண்டனர். தட்டி கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டினர்.

இவ்வாறு கற்பகம் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன், அமிர்த வள்ளி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பல குழந்தைகள் அவ்வப்போது திருட்டு போய் உள்ளது. இதில் சில குழந்தைகள் மீட்கப்பட்டன. இன்னும் சில குழந்தைகள் மீட்கப்படவில்லை.

இங்கு கடத்தப்படும் குழந்தைகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவியுடன் சுப்பிரமணியன் மூலம் மும்பை போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிக்கினால் கடத்தப்பட்ட குழந்தைகள் எங்கெங்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: