Monday, June 13, 2011

இலங்கைக்கு இந்தியா கொடுக்கும் ராணுவப் பயிற்சி ! தமிழக அரசியலுக்குள் புயலடிக்குமா?


இலங்கை கடற்படையினருக்கு இந்திய சிறப்புப் பயிற்சிகளைக் கொடுக்கவுள்ளது. இதற்காக இலங்கை கடற்படையின் முதலாவது பாட்ஜ், மும்பை சென்று இறங்கியுள்ளது. பயிற்சிக்காக இலங்கை கடற்படையைச் சேர்ந்த 42 பேர் இந்தியா சென்று இறங்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை யுத்தம் புரிந்த காலத்தில், இலங்கை ராணுவத்தின் சில பிரிவினருக்கு இந்தியா பயிற்சிகள் கொடுத்த செய்தி வெளியாகி, இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இந்தப் பயிற்சி இந்தியாவில் கொடுக்கப்படுகின்றன.

இந்தியக் கடற்படையின் செய்திக் குறிப்பு ஒன்றில், “தீவிரவாதம், மற்றும் கடற் கொள்ளைகளுக்கு எதிரான சிறப்புப் பயிற்சி” என இந்தப் பயிற்சி குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும், இந்திய எல்லையோரக் காவல்படை அதிகாரிகள், இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் கடந்த செவ்வாய்க் கிழமை ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தை, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் நடைபெற்றிருந்தது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்திய அதிகாரிகள், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றில் இலங்கை கடற்படையின் கப்பலுக்கு வந்து சேர்ந்தனர். இந்த ஹெலிகாப்டர், உச்சிப்புளியிலுள்ள இந்திய ராணுவத் தளத்திலிருந்து புறப்பட்டு. இலங்கை கடற்பரப்புக்கு வந்திருந்தது.

இன்றைய நிலையில், இலங்கை கடற்பரப்பில் தீவிரவாத அச்சுறுத்தல் ஏதுமில்லை. ஆனால், இந்தியக் கடற்பரப்பில் இன்னமும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தானில் பயிற்சிபெறும் தீவிரவாத அமைப்பினர், இந்தியாவின் கடல் எல்லைகளின் ஊடாகவும் ஊடுருவுகின்றனர் என இந்தியா குற்றம்சாட்டி வருகின்றது.

ஆனால், இந்த கடல்வழி ஊடுருவல்கள் எல்லாமே, இந்தியாவின் வடபகுதிக் கடலோரமாகவே நடைபெறுகின்றன. இந்தியாவின் தென்பகுதிக் கடலோரமாகவே இலங்கை இருக்கின்றது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயலும் தீவிரவாத அமைப்பினர் யாரும் இந்தியாவின் தென்பகுதிக் கடற்பரப்புக்கு வருவது சாத்தியமில்லை.

இங்கு குறிப்பிடப்படும் அடுத்த காரணம், கடற் கொள்ளையரைக் கட்டுப்படுத்துவது. சோமாலிக் கடற்பரப்பிலேயே அவர்களது நடமாட்டம் அதிகம். ஆனால், அவர்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் நடமாடுவது உண்டு.

இலங்கை கடற்படையினர் இந்தவாரம் மும்பை விமான நிலையத்தில் போய் இறங்கியபோது எடுக்கப்பட்ட போட்டோ.

இந்த விசயத்தில் வேறு ஒரு கதையும் இருக்கின்றது. சோமாலிக் கடற்கொள்ளையர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நடமாடும்போது, அவர்களது கப்பலுக்குத் தேவையான எரிபொருள் இலங்கை கடற்பரப்பில் வைத்தே சப்ளை செய்யப்படுகின்றது என்பதே அந்தக் கதை.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி, “கடற்கொள்ளையரைப் பொறுத்தவரை, எமது கடற்பகுதிகள் முன்புபோல பாதுகாப்பானவை அல்ல. இந்து சமுத்திரக் கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையருக்கு உதவி செய்யும் சில சக்திகள் இருப்பதை நாம் அறிவோம்” என்று கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ள ‘சக்திகள்’ இலங்கை கடற்பரப்பில் வைத்தே உதவுகின்றன என்பதே இந்தியாவின் ஊகம்!

இந்தவாரம் மும்பை சென்று இறங்கியுள்ள இலங்கை கடற்படையின் உறுப்பினர் ஒருவர், “இந்தியக் கடற்படையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். “இந்தியக் கடற்படையுடன் இணைந்து ஜாயின்ட் ஆபரேஷன்கள் சிலவற்றை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” எனவும் தெரிவித்த அவர், தனது பெயர் வெளியாவதை விரும்பவில்லை.

தமிழகத்தில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, “இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்திய மத்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்று கூறியுள்ள நேரத்தில், இலங்கை கடற்படையினர் சிறப்புப் பயிற்சிக்காக இந்தியா சென்று இறங்கியுள்ளனர்.

இந்த விசயம், தமிழக அரசியலை இதுவரை எட்டவில்லை. கொஞ்சம் பொறுங்கள், அடுத்தடுத்த தினங்களில் தமிழக அரசியலுக்குள் வந்துவிடும்!

No comments: