Monday, June 13, 2011

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா : லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்.

திருச்செந்தூர்  கோவிலில் வைகாசி விசாக திருவிழா:     லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று லட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகபெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. முருக பெருமானின் அவதார தினமான இன்று சுவாமியை தரிசனம் செய்தால் 12 மாதாந்தமும் சுவாமியை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பின்னர் மாலையில் கோவில் வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் 11 முறை சுற்றி வந்து முனி குமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகமும், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.

வைகாசி விசாக திருவிழாவை காண திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் பச்சை நிறம் மற்றும் காவி நிற உடை அணிந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், மொட்டை போட்டும், அங்க பிரதட்சனம் செய்தும் தனது நேர்த்தி கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதி கருதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: