Sunday, June 5, 2011

கறுப்புப் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க மத்திய அரசு சம்மதம் : உண்ணாவிரதத்தை கைவிட ராம்தேவ் மறுப்பு


ஊழல் மற்றும் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, பாபா ராம்தேவ், சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.

அந்த போராட்டத்தை கைவிடுமாறு, அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார். மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த மந்திரிகள், பாபா ராம்தேவை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் ராம்தேவ் ஏற்கவில்லை.

திட்டமிட்டபடி, அவர் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை அதே சமயத்தில், பாபா ராம்தேவ் தரப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்றும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு வந்ததால், பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரத போராட்டத்துக்கு 2 மணி நேர இடைவேளை விட்டார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களிடையே பேசியதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, சில கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. சில கோரிக்கைகளில், ஓரளவு ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

100 சதவீத கருத்து ஒற்றுமை ஏற்படும்வரை உண்ணாவிரதம் நீடிக்கும். என்னை அச்சுறுத்த முயற்சி நடக்கிறது. நிர்ப்பந்தம் மூலம் எனது வாயை அடைக்க முடியாது. இந்த போராட்டத்தில், நான் முதலில் தாக்க மாட்டேன். ஆனால், யாராவது என்னை தாக்கினால், சும்மா இருக்க மாட்டேன். பதிலடி கொடுப்பேன். நான் கமிட்டியை விரும்பவில்லை. எழுத்துமூலம் வாக்குறுதி அளிப்பதையே விரும்புகிறேன்.

எனது கோரிக்கைகளை ஏற்றால், மத்திய அரசுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும். இவ்வாறு பாபா ராம்தேவ் பேசினார். அதையடுத்து, ராம்தேவின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, மூத்த மந்திரிகளின் கூட்டத்தை பிரணாப் முகர்ஜி கூட்டினார். அக்கூட்டத்தில், மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில் சிபல், சுபோத்காந்த் சகாய், மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், பாபா ராம்தேவின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி மத்திய மந்திரி கபில் சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை `தேசிய சொத்து' ஆக அறிவிப்பது உள்பட பாபா ராம்தேவின் பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. தேசிய சொத்தாக அறிவிப்பதற்காக, புதிய சட்டம் கொண்டுவரப்படும். ஏற்கனவே உள்ள சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படும். இந்த சட்டப்படி, கறுப்பு பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

அதை வைத்திருப்பவர்கள், தண்டிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். இந்த சட்டம் தொடர்பாக, அறிவிக்கை வெளியிட வேண்டும் என்ற பாபா ராம்தேவின் கோரிக்கை சாத்தியம் அல்ல. ஒரே நாளில், சட்டத்தை உருவாக்கிவிட முடியாது. கறுப்பு பணத்தை அனுமதிக்கும் நாடுகளுக்கு அடிக்கடி செல்பவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பது, ஊழல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை, ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகளை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

எல்லா கோரிக்கைகள் மீதும் முழு உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், ராம்தேவிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு எழுத்துமூலம் பாபா ராம்தேவுக்கு தெரிவிக்கும். அதை பெற்றுக்கொண்டவுடன், உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அவர் உறுதி அளித்துள்ளார். அவர் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என்று நம்புகிறோம். இந்த விஷயத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டை பலவீனமாக கருதக்கூடாது.

மக்களின் கவலைகளை மத்திய அரசு கவனிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். பேட்டியைத் தொடர்ந்து, பாபா ராம்தேவை நேற்று இரவு 7 மணியளவில் கபில் சிபல் செல்போனில் தொடர்பு கொண்டார். அவரது பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தனது ஆதரவாளர்களிடையே இத்தகவலை பாபா ராம்தேவ் அறிவித்தார். அதைக் கேட்டு ஆதரவாளர்கள் உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாபா ராம்தேவும் ஆடிப்பாடினார்.

தனது போராட்டம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தார். இதன்மூலம், அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று விட்டதாக கருதப்பட்டது. ஆனால் அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறவில்லை. மத்திய அரசு எழுத்துமூலம் உறுதி அளிக்கும்வரை, தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஆதரவாளர்களிடையே பாபா ராம்தேவ் அறிவித்தார். அதுபற்றி அவர் பேசியதாவது:-

எனது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், எனது 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு எழுத்துமூலம் உறுதி அளிக்கும்வரை, எனது உண்ணாவிரதம் நீடிக்கும். அதற்காக மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தும் வகையில், இந்த உண்ணாவிரதத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

இருப்பினும், ஏதோ ஒரு காரணத்துக்காக நான் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டாலும், பொதுமக்கள் அமைதியாக இந்த போராட்டத்தை தொடர வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

No comments: