Sunday, June 5, 2011

ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்? தமிழர்களாக பிறந்தது தான் அவர்கள் செய்த பாவமா? வைகோ.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று கூறிய ஐ.நா.அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய வைகோ,

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம். குரல் கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிடப்படவில்லை. போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசை கண்டித்து, ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, ஈழத்தமிழர்களின் கண்ணீர் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களின் ஈனக்குரல், பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் அழுகுரல் அனைத்துலக காதுகளுக்கு கேட்கவில்லையா? என்று பேசினேன். இவ்வளவு துன்பங்களை அனுபவிக்க ஈழத்தமிழர்கள் என்ன பாவம் செய்தார்கள்?.

தமிழர்களாக பிறந்தது தான் அவர்கள் செய்த பாவமா? என்று கேட்டேன். எனக்கு 15 நிமிட நேரம் தான் ஒதுக்கினார்கள். அதற்குள் என்ன முக்கிய விஷயங்களை சொல்ல முடியுமோ? அதனை கூறினேன்.

பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர் என எல்லோரையும் குண்டு வீசி கொன்றது இலங்கை அரசு. குண்டுவீச்சு நின்று விட்டது என நினைத்து வெளியே வந்த குழந்தைகள் மீதும் குண்டுவீசி கொன்றது இலங்கை ராணுவ விமானங்கள்.

அறம் வெல்லும். நீதி வெல்லும். உண்மை ஒரு நாள் வெல்லும். என் வாய் பேச முடியும் வரை நான் இவற்றை பேசிக்கொண்டு தான் இருப்பேன். ஐரோப்பிய மாநாட்டில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதில்லை. வேறு பல உதவிகளும் நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். போர்க்குற்றம் புரிந்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார்.

No comments: