Sunday, June 5, 2011

பாபா ராம்தேவை போலீஸார் கடத்திச் சென்றனர் - ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு.


அமைதியான முறையில் ஊழலை ஒழிக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவை போலீஸார் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றுள்ளனர் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் திஜரவாலா கூறுகையில், போராட்டம் அமைதியான முறையில் நடந்து வந்தது. ஆனால் போலீஸார் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும்கலைத்து விரட்டி விட்டு ராம்தேவை கடத்திச் சென்றுள்ளனர்.

இது எமர்ஜென்சி காலத்தையே எனக்கு நினைவுபடுத்துகிறது. அப்போது கூட இப்படி நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. ராம்தேவ் தற்போது எங்கிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. போலீஸார் அதை சொல்ல மறுக்கின்றனர். அவருக்கு போலீஸாரால் ஆபத்து நேரிடுமோ என அஞ்சுகிறோம்.

உடனடியாக ராம்தேவை விடுதலை செய்ய இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

போலீஸாரின் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், நள்ளிரவில் பாபா ராம்தேவ் கைது செய்யப்பட்டிருப்பதும், அவரது ஆதரவாளர்களை விரட்டி அடித்ததும் ஊழல்வாதிகளையும், ஊழலையும் காக்க அரசு துடிப்பதையே காட்டுகிறது.

இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது போலீஸ் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது.

மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினால் இப்படித்தான் நடந்து கொள்வோம் என்று மத்திய அரசு மக்களை எச்சரித்துள்ளது இந்த சம்பவத்தின் மூலம் என்று கூறினார் அவர்.

No comments: