Sunday, June 5, 2011

தமிழக ஆளுநராகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா.


தமிழக ஆளுநராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆளுநராக இருக்கும் பர்னாலாவின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் முடிவடையவுள்ளது. இதையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிதாக அமைந்துள்ள அதிமுக ஆட்சியுடன் இணக்கமாக செயல்பட காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் முடிவு செய்திருப்பதால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணக்கமான ஒருவரை ஆளுநராக்க தீர்மானித்துள்ளது. அந்த வகையில் நவீன் சாவ்லாவின் பெயர் முதன்மையாக அடிபடுகிறது.

வரும் காலத்தில் திமுகவை உதறி விட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை தீர்மானித்திருப்பது அதன் சமீப கால நடவடிக்கைகளிலிருந்து உணர முடிகிறது. எனவே தனக்கும், அதிமுகவுக்கும் இணக்கமான நவீன் சாவ்லாவை ஆளுநராக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில் பர்னாலா பொருத்தமானவராக இருந்தார். அவர் தீவிர கருணாநிதி ஆதரவாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 2 முறை ஆளுநராக இருந்தவர் பர்னாலா. அவரது பதவிக்காலம் ஜூன் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

அடுத்த ஆளுநர் பதவிக்கு பெயர் அடிபடும் நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவும் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தவும், தனது கையை ஓங்க வைக்கவும் காங்கிரஸ் விரும்புகிறது. அதற்கு நவீன்தான் சரியான ஆள் என்பது காங்கிரஸின் எண்ணம். மேலும், அதிமுகவுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் நவீன் சாவ்லா உதவுவார் என்ற எண்ணத்திலும், அவரை அடுத்த ஆளுநராக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

No comments: