Wednesday, June 15, 2011

பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன : என்ன பாடம் சொல்லி கொடுப்பது என்பதில் குழப்பம்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படுகின்றன: என்ன பாடம் சொல்லி கொடுப்பது என்பதில் ஆசிரியர்கள் குழப்பம்

மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. பழைய பாடத்திட்டமா? சமச்சீர் கல்வியா? என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் மாணவர்களுக்கு என்ன பாடங்களை சொல்லிக்கொடுப்பது என்று ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சமச்சீர் கல்வி வழக்கில், ஒன்றாம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடங்களை ஆராய நிபுணர் குழு அமைத்து 3 வாரத்தில் முடிவு செய்து சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகள் திறக்கும் நாளன்று அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவ&மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முன்கூட்டியே புத்தகங்களை வாங்கி பள்ளி திறக்கும் நாளில் எடுத்துச் செல்வார்கள்.

என்ன சொல்லிக் கொடுப்பது? ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்பு, 6-ம் வகுப்பு நீங்கலாக 10-ம் வகுப்பு வரையுள்ள எஞ்சிய மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியா? அல்லது பழைய பாடத்திட்டமாக என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனால், 2, 3, 4, 5, 7, 8, 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்கு என்ன பாடங்கள் சொல்லிக்கொடுப்பது என்று தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒன்றாம் வகுப்பு, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி என்பதால் அவர்கள் முதல் நாளன்று தங்களுக்கான பாடப்புத்தகங்களை கொண்டு செல்வார்கள். எனவே, அந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. இதே போல் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழக்கம் போல் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இதர வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித புத்தகமும் இல்லாத நிலையில் தினமும் காலை முதல் மாலை வரை வகுப்பில் அவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்று ஆசிரியர்கள் குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.

வகுப்பில் பாடங்களை நடத்தினாலே ஒரு சில மாணவர்களை சமாளிக்க முடியாது. அப்படி இருக்கும் போது பாடப்புத்தகங்களும் இல்லாத நிலையில் 3 வாரங்களுக்கு எந்த பாடமும் நடத்தாமல் எப்படி அவர்களை கையாளப் போகிறோம் என்று ஆசிரியர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பொதுவாக, பாடப்புத்தகங்கள் வராத நேரங்களில் நீதி போதனை தொடர்பான வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

திருக்குறள் அல்லது ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுப்பதும் உண்டு. இல்லாவிட்டால் மாணவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து ஏதாவது கதை சொல்ல அல்லது பாட்டு பாடச் சொல்வார்கள். எனவே, சமச்சீர் கல்வியா? அல்லது பழைய பாடத்திட்டமா? என்பது முடிவு செய்யப்படும் வரை ஆசிரியர்கள் இது போன்று ஏதாவது செய்வார்களா? என்று தெரியவில்லை.

No comments: