Wednesday, June 15, 2011

கர்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை : 18 மாணவர்கள் சிக்கினர்.

கர்நாடகத்தில் எம்.பி.பி.எஸ். போலி மதிப்பெண் சான்றிதழ் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: 18 மாணவர்கள் சிக்கினர்

கர்நாடகாவில், போலி எம்.பி.பி.எஸ். மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுவரை 18 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள், அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பண வசதி இருந்தால் தேர்வில் பாஸ் செய்து விடலாம் என்பதை சமீபத்தில் வெளியாகி இருக்கும் மார்க் பட்டியல் ஊழல் விவகாரம் நிரூபித்துள்ளது.

இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் பணம் கொடுத்து பாஸ் ஆகி இருக்கும் தகவல் வெளியானதை அடுத்து, இதுபற்றி விசாரணை நடத்த மாநில கல்வி துறை உத்தரவிட்டது.

பெங்களூரில் உள்ள அல்-அமீன் பல் மருத்துவக் கல்லூரி, மற்றும் குல்பர்க்கா, தும்கூர், சித்ரதுர்க்கா ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் 7 மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். மற்றும் எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களில் சிலர், போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் பாசாகியுள்ளனர்.

தேர்வில் தோல்வி அடைந்த அந்த மாணவர்கள், தேர்வு அதிகாரியை சந்தித்து, மதிப்பெண்ணை திருத்தியுள்ளனர். கூடுதலாக வழங்கப்படும் ஒவ்வொரு சதவீதம் மதிப்பெண்ணுக்கும், ரூ.1 லட்சம் வீதம் லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்த மோசடி கடந்த 2006-ம் ஆண்டு முதலே நடந்து வந்துள்ளது.

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் மாநிலம் முழுவதும் 18 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புகாரில் சிக்கியுள்ள 7 மருத்துவக் கல்லூரிகளில் படித்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் போலி என்று தெரிய வந்தால் அந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மருத்துவக்கல்விதுறை மந்திரி ராம்தாஸ் உறுதி அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மோசடி குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களின் எம்.பி.பி.எஸ். டிகிரி சான்றிதழையும் ரத்து செய்ய தயங்க மாட்டோம் என்றார்.

போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்று பலர், டாக்டர்களாக பணிபுரிந்து வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போலி எம்.பி.பி.எஸ். மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments: