Wednesday, June 15, 2011

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் கலெக்டர் மகள் !




மேல்தட்டு மக்கள் பலரும் தம் பிள்ளைகளை மெட்ரிக் வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி, சி.பி.எஸ்.ஈ வழிக்கல்வி என்று இவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்த்தால்தான் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்றொரு நம்பிக்கை கொண்டுள்ளனர். அது அவர்களுக்கு பெருமையும் கூட.

நடுத்தர வர்கத்தினருக்கு மேற்கண்ட பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் கடன் பட்டாவது தம் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணம் ஒரு கௌரவ பிரச்சனையாக வெளிப்படுகிறது.

உளவியலோடு உற்றுப்பார்த்தால், தனக்கு கிடைக்காத கல்வி தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். தான் அடைய முடியாத இலக்குகளை தன் பிள்ளைகள் அடையவேண்டும். அவர்களது உயர்வுதான் தனது வாழ்க்கையின் உயர்வு. என்னும் இரண்டரக்கலந்த எண்ணம் பெற்றவர்களை புரட்டிப் போட்டுவிடுகிறது.

அதனாலேயே அரசுப் பள்ளியில் தான் படித்தது போதும். தன் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளியில் படிக்க வேண்டும். ஆங்கிலம் பேசவேண்டும், அது தான் அவனது எதிர்கால கல்லூரி படிப்பிற்கு துணை நிற்கும். என்பன போன்ற எண்ணங்கள் மேலும் வலுசேர்த்துவிடுகிறது.

அடித்தட்டு மக்களும், வறுமையோடு போராடியாவது ஆங்கில வழிக்கல்வியில் மாதச்சம்பளம் செலுத்தி சேர்த்துவிடுகின்றனர். இந்நிலை தொடரமுடியாமல் பாதியிலே நின்று போகக்கூடிய சூழலும் உண்டு. இருந்தபோதும் என் பிள்ளை இங்கிலீஸ் மீடியத்தில் படிக்கிறான் என்று கேட்பவர்களிடம் சொல்லும்போது எதையோ எட்டிப்பிடித்த சாதனை உணர்வு மனதினில் நிறைவது உண்மையாகவே படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தரம் இருக்காது, பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், சமூகத்தில் மரியாதை இருக்காது என்பது இவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

மேல்நிலைமக்களாகட்டும்,நடுத்தரவர்கத்தினராகட்டும்,அடித்தட்டுமக்களாகட்டும் யாருக்குமே குழந்தைகளின் சுமை தெரிவதில்லை., அவர்களின் கண்களுக்கும், மூளைக்கும் குழந்தைகளின் சிரமம் புரிவதில்லை சில நேரங்களில் ஆசிரியர் களுக்கும் கூட.

இப்படிப்பட்ட சமூக எதார்தத்தின் ஊடே முகத்தில் அறைந்த மாதிரி ஒரு நிகழ்வு.

ஒரு மாவட்ட கலெக்டர் தனது பிள்ளையை சாதாரண ஒரு அரசுப் பள்ளியில் 2வது வகுப்பில் சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார். இவர் நேற்று தனது மனைவி டாக்டர். ஸ்ரீவித்யா, மகள் கோபிகா ஆகியோருடன் ஈரோடு, குமலன் குட்டை பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கூடத்திற்கு வந்தார். நேற்றுதான் விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குள் அலைமோதிக் கொண்டிருந்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். ஈரோடு தொடக்க கல்வி அதிகாரி அருள்மொழி, மாணவர் சேர்க்கைப் பணியை பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது கலெக்டர் அங்கு வந்ததால், என்னவோ ஏதோ என்று அவரை நோக்கி தலைமை ஆசிரியையும், தொடக்கக் கல்வி அதிகாரியும், ஆசிரியர்களும் விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம் தனது மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வந்திருப்பதாக கலெக்டர் கூறவே அவர்களுக்கு அதிர்ச்சியானது. பிறகுதான் அவர்கள் சுதாரித்து தலைமை ஆசிரியை அறைக்கு கலெக்டர் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அங்கு தலைமை ஆசிரியை தனது இருக்கையில் கலெக்டரை அமரச் சொன்னார். அதை மறுத்து விட்ட கலெக்டர் பெற்றோர்கள் வந்து அமருவதற்காக போடப்பட்டு இருந்த நீண்ட பெஞ்ச்சில் அமர்ந்தார்.

பிறகு தனது மகளை தமிழ் மீடியத்தில் 2வது வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதை தலைமை ஆசிரியையிடம் கொடுத்தார். பின்னர் கோபிகாவை பள்ளியில் 2ஆம் வகுப்பில் சேர்த்தனர்.

மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக செயல்படும் புரவலர் திட்டத்துக்கு ரூ. 2000 வழங்கி, அத் திட்டத்தில் கலெக்டர் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவாள். இலவச சீருடை அவளுக்கும் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.அதன் பின்னர் தனது மகள் சத்துணவு சாப்பிடவும், சீருடை அணியவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் கலெக்டர்.

பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட கோபிகா தனது வகுப்புக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் அமர்ந்து படிக்க ஆரம்பித்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.

கலெக்டர் வந்து தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு, சத்துணவும் சாப்பிட ஏற்பாடு செய்து விட்டுச் சென்ற சம்பவம் அந்தப் பள்ளிக்கூடத்தை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்திற்குமே இது மிகப் பெரிய செய்தியாக அமைந்துள்ளது. ஏன் தமிழக மக்களுக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலகத்தில் சாதாரண அலுவலக உதவியாளர் வேலை பார்ப்பவர் கூட தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் பெரும் பணம் கொடுத்து சேர்க்கத் துடிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒருவர் சாதாரண அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது ஆச்சரியமாகவே உள்ளது.

ஆனால் கலெக்டர் ஆனந்தகுமாருக்கு இது பெரிய விஷயமாகவே இல்லை. தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை அவர் விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. மாறாக இது எனது தனிப்பட்ட விஷயம் என்று மட்டும் அடக்கமாக அவர் கூறினார்.

தனது செயலின் மூலம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறைமுகமாக ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார் கலெக்டர் ஆனந்தக்குமார். அரசுப் பள்ளிகள் தரமானவையே, அங்கு படிக்க வைப்பதால் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகி விடாது. அரசுப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் அரசு ஊழியர்களாவது மதிப்பும், மரியாதையும்,அங்கீகாரமும் தர வேண்டும் என்பதே அது.

கலெக்டரின் மகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை இனி பொதுமக்கள் உயர்வாக பார்க்கக்கூடும். ஆசிரியர்களும் தமது பணியினைச் செவ்வனே செய்தாக வேண்டும். அல்லது மாறி வரும் ஆசிரியர்கள் அதைச் செய்வார்கள்.

அதைப் போலவேதான் சத்துஉணவும், இலவச சீருடையும் இன்னபிறவும். ஒரு பள்ளியை நெறிபடுத்திய பெருமைக்கு உரியவராகிறார், ஈரோடு மாவட்ட கலெக்டர்.

தமிழ்வழியில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் தான் இன்றளவும் சாதனை யாளர்கள். குறிப்பாக கிராமங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த வருடம்கூட 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கூட இதை நோக்கியே பயணிக்கிறது. இனியும் பயணிக்கும், இதன் பயன் இனிக்கும்.

1 comment:

Ramachandranwrites said...

அற்புதம், இது போல எல்லா மக்கள் பிரதிநிதிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்தால் போதும், தரம் உடனடியாக உயர்ந்து விடும். இது பற்றிய எனது கருத்துகளை http://ramachandranwrites.blogspot.com/2011/06/blog-post.html காணவும்.

சிறப்பான செய்தி, பகிர்ந்தமைக்கு நன்றி

ராமசந்திரன்