Wednesday, June 15, 2011

சென்னை வக்கீலின் மகன் கொலை - சேலம் டாக்டரின் பரபரப்புத் தகவல் .



சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர சுப்புவின் காணாமல் போன மகன் சதீஷ்குமாரை கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசியதாக புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்புத் தகவலை சேலத்தைச் சேர்ந்த டாக்டர் பிருத்விராஜ் என்பவர் கூறியுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வி என்ற நர்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். போலீஸாருக்கு எதிரான வழக்குகளில்தான் இவர் பெரும்பாலும் ஆஜராவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பெரும்பாலானவற்றில் வெற்றியும் பெற்றவர் இவர். இவர்தான் தற்போது சதீஷ்குமார் மரணம் குறித்த புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சதீஷ்குமாரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இக்காயங்கள் அனைத்தும் அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்னர் ஏற்பட்டது போல தெரிகிறது. கொலை செய்து அவரை 16 மணி நேரத்துக்கு மேல் வெளியில் எங்கோ வைத்திருந்து, அதன் பின்னர் ஏரியில் அவரை தூக்கி வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதற்கான தடயங்களும், சதீஷ்குமாரின் உடலில் காணப்படுகிறது.

தண்ணீரில் மூழ்குவதற்கு முன்னர் அவரது உடல் அழுகி புழுக்கள் தோன்றியதற்கான அறிகுறிகளும் காணப்பட்டுள்ளன. இது போன்ற நோய்களில் பூச்சியல் நிபுணர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

ஏரியில் 5 நாட்களுக்கு மேல் சதீஷ்குமாரின் உடல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் அணிந்திருந்த செருப்பு காலிலேயே இருந்துள்ளது. காலை விட்டு எடுக்க முடியாத அளவுக்கு செருப்பு பற்றிக் கொண்டிருந்தது. கொலையாளிகளுடன் போராடும் போது தான் இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளது. சதீஷ்குமார் தற்கொலை செய்திருந்தால் மறுநாளே உடல் மிதந்திருக்கும். மூக்கில் இருந்து நுரை தள்ளியிருக்கும். இது போன்ற அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட கொலை போலவே உள்ளது என்று அவர் கூறினார்.

பிரதேப் பரிசோதனை முடிந்தது

இந்த நிலையில் சதீஷ்குமாரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. அரசுத் தரப்பில் டாக்டர்கள் சாந்தகுமார், முருகேஷ், சங்கர சுப்பு தரப்பில் டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் இதில் ஈடுபட்டனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உடன் இருந்தார். சங்கரசுப்பு சார்பில் ஒரு வீடியோகிராபரும், அரசு சார்பில் ஒரு வீடியோகிராபரும் இருந்தனர். ஒரு அரசுத் தரப்பு புகைப்படக்காரரும் உடன் இருந்தார்.

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடலை வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த வக்கீல்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போலீஸாரை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மோதல் வழக்கில் தொடர்புடையவருமான ஆம்ஸ்டிராங்கும் உடன் இருந்தார்.

No comments: