Wednesday, June 15, 2011

லோக்பால் மசோதாவுக்கு 'நேர்மையான' மன்மோகன் சிங் தயங்குவது ஏன்?



லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும். இதில் தன்னையும் உள்படுத்திக் கொள்ள நேர்மையான மன்மோகன் சிங் ஏன் தயங்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் லோக்பால் சட்டத்தை கடுமையாக்கக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஹசாரேவை உள்ளடக்கிய லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இத நிலையில் அன்னா ஹசாரே மற்றும் இந்தக் கமிட்டியில் இடம் பெற்றுள்ள மக்கள் பிரதிநிதிகளான அர்விந்த் கெஜரிவால், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,

ஊழல் குற்றம் சாட்டப்படுவோரிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருக்கும் ஊழல் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறை தண்டனை வரை வழங்கும் அதிகாரம் கொண்டதாக லோக்பால் மசோதா அமைய வேண்டும்.

இந்த நாட்டை 6,000 சமூக சேவை செய்வோர் குழப்புகிறார்கள், என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். இது போன்ற தேவையற்ற கருத்துகளை சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கமிட்டியின் தலைவராக இருக்கும் அவர், முன்னுக்கு பின்னாக சர்க்கசில் பல்டி அடிப்பது போல கருத்துக்களை மாற்றி மாற்றி பேசி வருகிறார். கமிட்டியில் இடம் பெற்று இருக்கும் 5 அமைச்சர்களுமே எங்கள் செயல்பாட்டுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.

லோக்பால் சட்ட வரம்புக்குள் மத்திய அமைச்சர்களை உட்படுத்துவதில் இதுவரை எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் பிரதமரைச் சேர்ப்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இதில் பிரதமரையும் சேர்க்க வேண்டும். சேர்க்கா விட்டால், இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

இதுபற்றி, உங்கள் நிலை என்ன? எங்களுக்கு தெளிவு படுத்துங்கள், என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் அனுப்பி இருக்கிறோம். மோசடி செய்யாத, உண்மையாக உழைக்கும் நேர்மையான பிரதமர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர். அப்படியிருக்க மன்மோகன் சிங், ஏன் லோக்பால் மசோதாவுக்கு பயப்பட வேண்டும்?.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் ஹசாரேவைத் தாக்கி பேசியிக்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க முகமூடியை அணிந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தவறு. சோனியாவின் கருத்து, லோக்பால் சட்டத்தை உருவாக்கும் பணிக்கு தடை ஏற்படுத்தும். இதை அவரும், மத்திய அமைச்சர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மத்தியஅரசு தெரிவித்தபடி ஆகஸ்டு 15ம் தேதிக்குள் நாடாளுமன்றத் தில் , கடுமையான, உறுதியான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் 16ம் தேதி ஹசாரே தனது போராட்டத்தை தொடங்குவார்.

நாட்டில் சமூக- அரசியல் மாற்றம் ஏற்படுவதை யாரும் தடுக்க முடியாது. இதை அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றனர்.

சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஹசாரே-காங்கிரஸ் தாக்கு:

இந் நிலையில் அன்னா ஹசாரே, சர்வாதிகாரி போல் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, அன்னா ஹசாரே. பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார்.

தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரி போல் செயல்படும் நபரால் ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், தேசத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளின் கருவியாக அவர் செயல்படுவதாகவும் திவாரி குற்றம் சாட்டினார்.

No comments: