Wednesday, June 15, 2011

கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் காது இல்லாமல் பிறந்த முயல் குட்டி : ஜப்பான் மக்கள் பீதி.

கதிர்வீச்சு பாதித்த புகுஷிமாவில் காது இல்லாமல் பிறந்த முயல் குட்டி: ஜப்பான் மக்கள் பீதி

கடந்த மார்ச் 11-ந்தேதி ஜப்பானில் பூகம்பமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் புகுஷிமாவில் தாங் - இச்கி அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. இதைதொடர்ந்து அங்குள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு அது காற்றில் பரவியது.

குடிநீர், பால் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களிலும் ஊடுருவியது. இதனால் பாதிப்பு ஏற்படும் என கருதி 20 கி.மீட்டர் சுற்றளவில் தங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்ததும் மக்கள் மீண்டும் அங்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் புகுஷிமா அருகே உள்ள நமி நகரில் யுகோ சுஜிமோடோ என்பவரின் பண்ணையில் காது இல்லாத முயல் குட்டி பிறந்துள்ளது. இந்த முயல் குட்டிக்கு காது மட்டுமே இல்லை என்ற குறை தவிர வழக்கம் போல் மற்ற உறுப்புகள் உள்ளன. வெள்ளை நிறம், சிவப்பு கண்களுடன் அது உள்ளது. காய்கறிகள் மற்றும் புல்லை சாப்பிடுகிறது.

இந்த முயல் குட்டி பிறந்துள்ள நமி நகரம் கதிர்வீச்சு அதிகம் பாதித்த பகுதியில் உள்ளது. எனவே, கதிர்வீச்சு பாதித்ததால் கர்ப்பமான முயலுக்கு பாதிப்பு ஏற்பட்டு அது காது இல்லாத குட்டியை ஈன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது ஜப்பான் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கதிர்வீச்சு அபாயம் தற்போது வெளிப்பட தொடங்கி விட்டதாக கருதுகின்றனர். இதை நிபுணர்கள் மறுத்துள்ளனர். சில நேரங்களில் மனிதர்களை போன்று விலங்குகளும் இதுபோன்ற குறைபாடுடைய குட்டிகள் பிறக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

1 comment:

மதுரை சரவணன் said...

payamaa irukkungka.. pakirvukku nanri.. vaalththukkal