Wednesday, June 15, 2011

இலங்கையை கண்காணிக்க ஜெயலலிதா ஆர்வம்



இலங்கையில் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த சரியான தகவலைப் பெற்றுத் தாருங்கள் என பிரதமர் மன்மோகன் சிங்கைக் கோரியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

பாரதப் பிரதமரிடம், முதல்வர் ஜெயலலிதா இந்தக் கோரிக்கையை முன்வைத்த போது, இலங்கை விவகாரங்களைக் கவனிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் அங்கிருந்தார். சமீபகாலமாக, இலங்கை அரசுடன் தமிழ் மக்கள் தொடர்பான தகவலை விட சிவசங்கர் மேனன் ஊடாகவே இந்திய அரசு கையாண்டு வருகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமரைச் சந்திக்குமுன் இலங்கை தொடர்பான பல துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இந்தியா கொண்டுவரவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றும் அவரால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதனால் பிரதமருடனான சந்திப்பின்போது, இலங்கை தொடர்பான பேச்சுக்களும் இடம்பெறும் என்பதை ஊகித்தே, சிவசங்கர் மேனனும் பிரதமர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

“இலங்கையிலுள்ள முகாம்களில் இன்னமும் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதில் மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக் கின்றன. இதை மத்திய அரசு சரிபார்க்க வேண்டும். தவிர, அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருவதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழுவை அனுப்ப அனுமதிக்க வேண்டும்” என்ற கோரிக்கையும் தமிழக முதல்வரால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

இன்னமும் எத்தனை பேர் இருக்கிறார்கள் முகாம்களில்?

இதற்குமுன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கைக்குச் சென்று திரும்பியிருந்தது. அந்தக் குழுவில் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களே இடம்பெற்றிருந்தனர்.

தற்போது ஜெயலலிதா, “தமிழக சட்டசபையின் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்துவர வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்தவர்களையும், தோழமைக் கட்சியினரையும் மாத்திரம் அனுப்புமாறு கோராமல், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு இணங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது மத்திய அரசு.

கடந்த மாதம், தீவிரவாத விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்படும், பேராசிரியர் ரொஹான் குணரட்ண, முதல்வர் ஜெயலலிதாவை இலங்கைக்கு அழைக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

இவர் சிங்கப்பூரில் இயங்கும் International Centre for Political Violence and Terrorism Research (IC PVTR) அமைப்பின் தலைவர்.

“சமீபத்தில் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் துணைச் செயலாளர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். யுத்தம் நடைபெற்ற வன்னிப் பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் அபிவிருத்தி வேலைகளை நேரில் கண்டுவிட்டுச் சென்றிருக்கின்றார். அதுபோலவே, தமிழக முதல்வரையும் அழைத்து வன்னியில் நடப்பவற்றை நேரில் பார்க்கும்படி செய்யவேண்டும்” என்றும் அவர் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

ரொஹான் குணரட்ண, இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவராகச் செயற்படுபவர் என்று பரவலாகக் கூறப்படுகின்றது.

இந்த விதத்தில், இந்திய அரசு தமிழக சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை செல்வதற்காக அனுமதி கோரினால், இலங்கை அரசு அதற்கு அனுமதி வழங்கும் என்றே ஊகிக்கலாம்.

தமிழகத்திலிருந்து இலங்கை பற்றிய குரல்கள் தற்போது அதிகமாக எழத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மத்திய அரசும் தமிழக எம்.எல்.ஏ.க்களின் குழுவொன்றை அங்கு அனுப்பிவைக்கவே விரும்பும்.

டில்லியில் பிரதமரை சந்தித்து விட்டு திரும்பிய பிறகு நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “இலங்கையில் எத்தனை பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கம், வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே முகாம்களில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனியார் தொண்டு நிறுவனங்களோ, அதை விட அதிகமான எண்ணிக்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. இதில் எது உண்மை என்பது பற்றி ஆராய்ந்து, உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இலங்கையுடன் தற்போது மத்திய அரசே டீல் பண்ணிக்கொண்டிருக்கின்றது. மாநிலஅரசு மட்டத்தில், இலங்கையின் நேரடியான தகவல்கள் தேவை என்று ஜெயலலிதா கோருகின்றார்.

நிர்வாக விசயங்களில் முடிவெடுக்குமுன், துல்லியமான தகவல்களைக் கையில் வைத்திருக்க விரும்புவார் ஜெயலலிதா என்று கூறப்படுவதுண்டு.

No comments: