Saturday, May 7, 2011

இணையதளம் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு.



குமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியில் ஏ.வி.எம். கால்வாயில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கி வைக்கிறார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக்கு, இணைய தளத்தை வலுவான களமாகப் பயன்படுத்தி முன்மாதிரி காட்டியிருக்கிறார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.

அவரது இந்த நடவடிக்கைகளால் பிளாஸ்டிக் குப்பைகள் குவியாத வீதிகள் இம் மாவட்டத்தில் இன்னும் பளிச்சிடுகின்றன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை, டீ கப், ஜவுளிக் கடை பைகள், உணவகங்களில் சாம்பார், மோர், ஜூஸ் கட்டிக் கொடுக்கப்படும் பைகள் உள்ளிட்ட பொருள்களின் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடைவிதித்தது.

நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்தத் தடை அமலுக்கு வந்தது. தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை களும் துரிதப்படுத்தப் பட்டுள்ளன.

இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாலும், அவற்றை எரிப்பதாலும் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எடுத்துரைத்து மாவட்டம் முழுக்க பேரணி, கலந்தாய்வு, பிரசாரம் என பல்வேறு வகைகளில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

அரசு விழாக்கள் முதல் தனியார் விழாக்களிலும் இதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இதற்கென்று இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு, அது அனைத்து அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டன.

நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பின் தேவை குறித்து விளக்கினார்.

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக்காக இணையதளத்தை ஒரு முக்கிய கருவியாக இவர் பயன்படுத்தியிருப்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

பேஸ்புக் டாட் காம் ((facebook.com) இணையதள முகவரிக்குள் பிளாஸ்டிக் இல்லா கன்னியாகுமரி (plastic free kanyakumari) என்ற இணையப் பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் தவிர்ப்பு நடவடிக்கைகளை கணினி பயன்பாட்டாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உலகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த இணையப் பக்கத்தில் தங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.

பல நேரங்களில் இந்த இணையப் பக்கத்தில் பொதுமக்கள் தரப்பில் புகார்களும் பதிவு செய்யப்பட்டு, அவற்றின்மீது உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

ஆட்சியரின் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கருத்துகளுக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். இப்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் மாறியிருக்கிறது.

மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருள்களையும் வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தடையை மீறும் மொத்த விற்பனையாளர் ரூ. 1,000, சில்லரை வியாபாரிகள் ரூ. 500, பயன்படுத்துவோர் ரூ.100, பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்கள் ரூ.100, தனிநபர் அல்லது வீடுகள் ரூ.25 என்று அபராதக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள கேரி பேக், டீ கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு முற்றிலும் குறைந்திருக்கிறது.

பெரும்பாலும் அனைத்துக் கடைகளிலும் இத்தகைய பொருள்களை வாடிக்கையாளர்கள் கேட்டாலும் தருவதில்லை. பலசரக்குக் கடைகள், பழக்கடைகளில் காகிதங்களிலும், தாமரை இலைகளிலும் பொருள்களைப் பொதிந்து அளித்து வருகிறார்கள். இறைச்சிக்கடைகளில் 20 மைக்ரானுக்கு அதிக தடிமனுள்ள பிளாஸ்டிக் பைகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி வீதிகளில் 2010 மார்ச் மாதம் வரையில் நாள்தோறும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், வாட்டர் பாக்கெட்டுகள் என்று பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இறைந்து கிடக்கும்.

இப்போது அந்நிலை மாறியிருக்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இதை பார்த்து வியந்து, பேஸ்புக் டாட்காம் இணைய தளத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதுடன், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தெருக்களைப் பார்த்த தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் எந்தத் திட்டமும் வெற்றிபெறும் என்பதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

No comments: