Saturday, May 7, 2011

கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 14-ந்தேதிக்கு ஒத்திவைப்பு..

சி.பி.ஐ.வக்கீல் வாதம்:கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 14-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி. நேற்று ஆஜரானார். அவர் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஜாமீன் மனு தாக்கல் செய்து வாதாடினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் குற்றமற்றவர். எனவே அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று ராம்ஜெத் மலானி வலியுறுத்தினார்.

அதன் பிறகு கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி சார்பில் வக்கீல் அல்தாப் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் கடன் வாங்கி திருப்பிக் கொடுப்பது போன்ற நடைமுறையைத் தான் கலைஞர் டி.வி. பின் பற்றியது. எனவே நாங்கள் எந்த தவறும் செய்ய வில்லை என்றார்.

மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு பல்வா வக்கீல் வாதாடினார். அவரது வாதம் மாலை வரை நீடித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். இதனால் கனிமொழி எம்.பி. தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து ஓய்வு எடுத்தார்.

ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, பல்வா ஆகியோர் திகார் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று இரண்டாவது நாளாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விசாரணை நடந்தது. காலை 10 மணிக்கு கனிமொழி எம்.பி. கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.

முதல் மற்றும் இரண்டாவது குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 14 பேரில் கரீம் தவிர 13 பேர் இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர். தி.மு.க. எம்.பி.க்களும் கோர்ட்டு வளாகத்தில் இருந்தனர். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தவர்கள் வாதம் முடிந்த நிலையில் சி.பி.ஐ. வக்கீல் யு.யு.லலித் இன்று தனது வாதத்தைத் தொடங்கினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். ஜாமீன் மனுதாரர்களின் வாதங்களையும் மறுத்து அவர் பேசினார். கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு சிறப்பு கோர்ட்டு நீதிபதி சைனி கூறியதாவது :-

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு 14-ந் தேதி வரை ஒத்தி வைக்கப் படுகிறது. 14-ந் தேதி வரை கனிமொழி, சரத்குமார் இருவரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்தைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. தமிழ்நாடு இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டு எத்தகைய உத்தரவை வழங்கும் என்பதை அறிய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். இதனால் கோர்ட்டு வளாகம் முழுவதும் இன்று காலை முதலே பரபரப்பு நிலவியது.

No comments: