Friday, May 20, 2011

இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும் ; வைகோ ஆவேசம்.

இலங்கை போர் குற்றவாளி  ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி  தூக்கிலிட வேண்டும்;  வைகோ ஆவேசம்

சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் இலங்கை முள்ளி வாய்க்கால் படுகொலை 2-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

2 ஆண்டுகளுக்கு முன்னர் மே 17-ம் நாள், தமிழ் இனத்தை அழிக்க மாபாதகம் செய்த ராஜபக்சே கூட்டத்தை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தித் தண்டிப்பதற்குச் சூளுரைக்கவும், தாய்த் தமிழகம் ஆர்த்து எழவும் இந்த நிகழ்ச்சியை இங்கே நாம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

தமிழ் இன படுகொலையில் இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல, இந்திய அரசுதான் குற்றவாளி. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை, அதன் கைப்பாவையாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரவையில் பங்கு ஏற்ற அமைச்சர்கள், அரசியல் கட்சிகள், இவர்கள் எல்லோரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசு கொடுத்த ஆயுதங்கள், ரடார்கள், அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், அனுப்பி வைத்த முப்படைத் தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், தந்து உதவிய நவீனக் கருவிகள், துல்லியமாக இலக்குகளைக் கண்டறிந்து குண்டு வீசுவதற்குச் செய்து தந்த ஏற்பாடுகள்தான் காரணம்.

இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம் என்றார் பிரபாகரன். ஆனால், சோனியாகாந்தி திட்டமிட்டு, ஈழத்தமிழ் இனத்தைக் கரு அறுப்பதற்கு, மன்மோகன் சிங் அரசைப் பயன்படுத்திக் கொண்டார். எலும்புத் துண்டுகளைப் போடுவது போல சில மந்திரி பதவிகளைக் கருணாநிதிக்குத் தூக்கி எறிந்தார்.

அதையே சாசுவதம் என்று நினைத்து, இன்றைக்குத் தீராத பழியைத் தேடிக்கொண்டார் கருணாநிதி. அவருக்காக நான் வேதனைப்படுகிறேன். அது அண்ணா உருவாக்கிய இயக்கம், ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி நாங்கள் வளர்த்த இயக்கம். எல்லாவற்றையும் பாழாக்கி விட்டீர்களே? பழிதானே மிஞ்சியது? இழிவுச்சொல்தானே மிஞ்சியது? இனத்துரோகி என்ற பட்டம்தானே மிஞ்சியது? இப்போது, கலைஞர் மிகவும் நொந்து போயிருக்கிறார். அவரை மேலும் கஷ்டப்படுத்த நான் விரும்ப வில்லை.

ஆனால், அவர் செய்த துரோகங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. குற்றவாளிக் கூண்டில் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும். ஆனால், ஏழு கோடித் தமிழர்கள் இருக்கின்ற இந்தியாவே சும்மா இருக்கிறதே என்றுதான், மற்ற நாடுகள் இதில் தலையிட முன் வரவில்லை. கேடே நாம்தான். அதைத்தானே நார்வே நாட்டுக்காரர்கள் சொல்லுகிறார்கள்.

இப்படி ஒரு சிக்கலில் நாம் தவித்துக் கொண்டு இருந்தாலும், இதில் இருந்து மீள முடியும். அதற்காகத்தான், முத்துக்குமார் உள்பட நேற்றைய கிருஷ்ணமூர்த்தி வரை 17 பேர் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள். இந்த வீர வணக்கத்தைச் செலுத்துகின்றபோது, முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நிராதரவராய்த் தவித்தார்களே, பதறினார்களே, பச்சைக்குழந்தைகளைப் பறி கொடுத்தார்களே, அந்தப் பாவத்துக்கு மன்னிப்பு உண்டா? நாதியே இல்லையா தமிழ்ச்சாதிக்கு? இதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

ராஜபக்சேயைக் கூண்டில் நிறுத்தித் தூக்கில் இட்டால் தான் தமிழன் சாப்பிட்ட சோறு செரிக்கும். தமிழ் ஈழம் மலர்வதை நாம் காணத்தான் போகிறோம். செய்த தியாகம் வீண் போகாது. சிந்திய ரத்தத்தின் மீது ஆணை. எரியும் தழல் நெருப்பின் மீது ஆணை. மாவீரர்கள் செய்த தியாகத்தின் மீது ஆணை. தமிழ் ஈழத்தை மீட்டெடுக்க, தமிழகத்து இளைஞர் கூட்டம் கிளர்ந்து எழ வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

No comments: