Friday, May 20, 2011

ஏற்காடு கோடை விழா 27-ம்தேதி தொடங்குகிறது.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு தேர்தல் காரணத்தால் கோடைவிழா நடக்குமா? நடக்காதா? என பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர். இப்போது தேர்தல் நடந்த முடிந்து விட்டது. இதனால் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 27-ம் தேதி தொடங்குகிறது.

பின்னர் விழா 29-ம்தேதி வரை நடக்கும். இந்த விழா குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சந்திரக்குமார் தலைமை வகித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஏற்காட்டில் ரூ.11கோடி செலவில் பொட்டானிக்கல் கார்டன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு மலர்கண்காட்சியில் ஒரு லட்சம் மலர்களை கொண்டு விதவிதமான அலங்கார வடிவங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள் இந்தாண்டும் இருக்கும். ஏற்காடு ஏரி தூர்வாரும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்காட்டில் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க ஏற்காடு டூ ஏற்காடு என்ற பெயரில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு போட்டிகளும் , கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விழா மற்றும் மலர்கண்காட்சியை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார். இதுதவிர சுற்றுலாத்துறை அமைச்சர் உள்பட பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட உள்ளதாக கலெக்டர் சந்திரக்குமார் தெரிவித்தார்.

No comments: