Monday, August 15, 2011

ஹசாரே உண்ணாவிரதம் தேவையற்றது : ஊழலை ஒழிக்க வலுவான மசோதா ; சுதந்திர தின விழாவில் மன்மோகன்சிங் பேச்சு.

ஹசாரே உண்ணாவிரதம் தேவையற்றது:   ஊழலை ஒழிக்க  வலுவான மசோதா;   சுதந்திர தின விழாவில் மன்மோகன்சிங் பேச்சு

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் உள்ள சிலர் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த நினைக்கிறார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நம்மிடம் உள்ள தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியிலான வேறுபாடுகளை கடந்து நாட்டு நலனுக்காக நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். மக்கள் நலனுக்காக விரைவில் நாங்கள் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர உள்ளோம்.

ஊழல் வழக்குகளில் மத்திய அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அது நாட்டின் வளர்ச்சியை கேள்விக் குறியாக்கும் வகையிலான ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடக் கூடாது. ஊழலைத் தடுக்க வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர விரும்புகிறோம். தற்போதைய லோக்பால் சட்ட விதிகளை ஏற்காதவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் போன்றவைகளை நடத்துவதை கைவிட வேண்டும்.

ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் பல வழிகளில் நடவடிக்கை தேவை. ஒரே ஒரு பெரிய நடவடிக்கை மூலம் ஊழலை வேரறுத்து விட முடியாது. எந்த அரசிடமும் அத்தகைய மேஜிக் இல்லை. எனவே வலுவான லோக் பால் சட்டம் தேவை.

இந்த சட்டம் தொடர்பாக முரண்பாடான கருத்துக்கள் எழுந்திருப்பது எனக்குத் தெரியும். அத்தகையவர்கள் பாராளுமன்றம், அரசியல் கட்சிகள் அல்லது பத்திரிகைகளிடம் கூட தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இதைவிடுத்து சிலர் கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க நினைப்பது தேவையற்றது. உண்ணா விரத போராட்டங்களால் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழல் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இதற்காக பாராளுமன்றத்தில் விரைவில் லோக்பால் சட்டம் கொண்டு வரப்படும். அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடந்த சில மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சில வழக்குகளில் மத்திய அரசு பணியாளர்கள் ஊழலில் தொடர்புடைய குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கி உள்ளனர்.

மாநில அரசு பணியாளர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாங்கள் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த ஊழல் வழக்கு விசாரணைகள் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து நான் விரிவாக பேசக் கூடாது.

ஊழல் நமக்கு சவாலாக உள்ளது. இது தொடர்பான விவாதங்கள் நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டும். இந்த சவால்களை நம்மால் வெற்றிக் கொள்ள முடியும். ஊழல் பல வடிவங்களில் உள்ளது. சில சமயங்களில் சாதாரண மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசு அதிகாரிகளின் பைகளில் போய் சேர்ந்து விடுகிறது. சில சமயம் அரசு பணியாளர்கள், தனியாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். அரசு பணி திட்ட ஒப்பந்தங்கள் தவறான மனிதர்களுக்கு தவறான முறைகளில் வழங்கப்பட்டு விடுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் தொடர அரசு அனுமதிக்காது. அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும் போது சாதாரண மக்களுக்கு எந்த அநீதியும் நடக்காது என்பது இனி உறுதி செய்யப்படும். இதற்காக விரைவில் புதிய நில கையகப்படுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். நாடெங்கும் அனைத்து மட்டங்களிலும் கல்வியை மேம்படுத்த புதிய கல்வி கழகம் உருவாக்கப்படும்.

நக்சலைட் தீவிரவாதம் ஒடுக்கப்படும். சர்வதேச அளவில் எண்ணை விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக நமது நாட்டில் அத்தியாவசியமான பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது தான் அரசின் கடமை ஆகும். சில சமயம் நாட்டுக்கு வெளியில் உள்ள சக்திகள் காரணமாகவும் விலை உயர்வு ஏற்படுகிறது.

சமீப காலமாக பெட்ரோலிய பொருட்கள், உணவு தானியங்கள், எண்ணை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து விட்டது. பணவீக்கம் குறிப்பாக உணவு பண வீக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. பொது பண வீக்கமும், உணவு பண வீக்கமும் இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. இது சாதாரண மக்களின் வாங்கும் சக்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக பணவீக்க சூழ் நிலையை நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் விலைவாசி உயர் வைக்கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே வரும் மாதங்களில் அரசின் மிக முக்கிய கடமையாக இருக்கும். பொது நலத்திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்த வேண்டியது அவசியம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் நிலங்களை சார்ந்து வாழ்பவர்களின் நலன்பாதுகாக்கப் பட வேண்டும்.

இதற்காக 117 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாற்றப்படும். இதற்கு வரைவு மசோதா தயாரிக் கப்பட்டுள்ளது. விரைவில் இதில் ஒருமித்த கருத்து உரு வாக்கப்படும். எனது தலைமையிலான மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளில் நிறைய சாதனைகளை செய்துள்ளது. இந்த சாதனை தொடரும்.

மும்பையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் நாம் கண்காணிப்பில் சாதாரணமாக இருக்கக் கூடாது என்பதை எச்சரிப்பது போல உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பால் தீவிரவாதத்தை எதிர்ப்பது நீண்ட கால போராட்டமாக உள்ளது.

நக்சலைட் தீவிரவாதமும் நாட்டு வளர்ச்சிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நக்சலைட்டுக்களை ஒழிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நக்சலைட் தீவிர வாதம் வேரறுக்கப்படும். நக்சலைட்டுக்கள் உள்ள 60 பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டங்களில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.3300 கோடி செலவிடப்படும்.

உலக பொருளாதாரம் தற்போது மந்தமாக உள்ளது. இந்த நிலையில் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நாம் முழுமையாக புரிந்து கொண்டு செயல் படா விட்டால், அது நாட்டின் பாதுகாப்பையும் செழு மையையும் பாதிப்பதாக அமைந்து விடும். உலக அளவில் நமது பொருளாதாரம் சக்தி வாய்ந்ததாக இருப்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன.

நமது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலைவாசி உயர்வு பிரச்சினையை சமாளிக்க முடியும். சமீப காலமாக உணவு தானிய உற்பத்தி சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் உணவு தானியங்கள் உற்பத்தி 241.56 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சாதனைக்காக நான் விவசாயிகளைப் பாராட்டுகிறேன்.

பருப்பு வகைகள், கோதுமை, எண்ணை வித்துக்களின் உற்பத்தியும் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு தானியங்கள், சர்க்கரை மற்றும் பருத்தி வகைகளை நாம் ஏற்றுமதி செய்ய இன்று பரிந்துரைகள் வந்துள்ளன. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விரைவில் உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விவசாயத்தில் இரண்டாவது பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். விவசாய உற்பத்தி இன்னும் அதிகரித்தால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். அது போல கல்வி இல்லாமையும், வறுமையும் தொடர்ந்து சவாலாக இருக்கிறது. ஆரம்ப கல்வி என்பது நமது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

பதினோராவது ஐந்தாண்டு திட்டம் கல்வி திட்டமாக இருந்தது. அது போல 12-வது ஐந்தாண்டு திட்டம் சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமாக இருக்க வேண்டும். பருவநிலை மாற்றம் நமது வளர்ச்சி பணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்ள 8 அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் சுற்றுச் சூழல் ஆய்வுக்கான பணி தொடங்கும். தொழில் அதிபர்கள் புதிய தொழில்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

No comments: