Monday, August 15, 2011

வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய நிலஅபகரிப்பு புகார்.

முன்னாள் அமைச்சர்   வீரபாண்டி ஆறுமுகம் மீது   புதிய நிலஅபகரிப்பு புகார்

சேலம் அங்கம்மாள் காலனி மற்றும் சேலம் சாரத கல்லூரி ரோடு பிரிமியர் ரோலர் மில் நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவும் சேலம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோவில் நிலத்தை அபகரித்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீது புதிய புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் இடைப்பாடி கவுண்டம்பட்டி ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில் பரம்பரை பூசாரியாகவும், அறக்கட்டளை தலைவராகவும் உள்ளேன். இந்த கோவில் எனது குடும்பத்துக்கு உயில் மூலம் பாத்தியப்பட்டது. வன்னிய குல சத்திரியர் அய்யனாரப்பன் அறக்கட்டளை நிறுவப்பட்டு பதிவு செய்து நிர்வகித்து வரப்பட்டது. இது எங்களது குடும்ப கோயிலாகும்.

இந்த கோயிலுக்கு செல்வதற்கு வழித்தடம் மற்றும் பொங்கல் வைக்க இடமோ இல்லை. அதனால் 4.25 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோருக்காக கல்லூரி கட்ட வேண்டியுள்ளது. ஆகவே ரூ. 12 லட்சம் வாங்கிக் கொண்டு நிலத்தை கிரயம் செய்து கொடுத்துவிடு என்று எடப்பாடி தி.மு.க. நகர செயலாளர் ஜெய பூபதி கேட்டார். நான் மறுத்து விட்டேன்.

2009- ஆம் ஆண்டு கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது காரில் என்னை 4 பேர் அழைத்துக் கொண்டு பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் என்னிடம் ரூ. 12 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஜெயபூபதி பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடு, இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, தி.மு.க. நகர செயலாளர் ஜெயபூபதி ஆகியோர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். நிலம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் என்னுடைய சகோதரன் ஆறுமுகம் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டேன். அதன் பிறகு போலீசார் என்னையும் தம்பியையும் அழைத்து பேசினார்கள். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நிலத்தை கொடுத்து விடு, இல்லையென்றால் உன்மீது பொய் வழக்கு போடுவோம் என்று மிரட்டினார்கள்.

கோயிலில் பூஜை செய்யவும் விடமாட்டோம் என்றனர். நான் மறுத்ததால் கோயில் சாவியை பறித்துக் கொண்டு, அங்கிருந்த பஞ்சலோக சிலையையும் எடுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே அய்யனாரப்பன் கோயில் சொத்து, பஞ்சலோக சிலைகள், கோயிலுக்காக வாங்கிய 4,25 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா, எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி உள்பட 29 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

இந்த புகார் மனுவை எஸ்.பி. மயில்வாகனன் உடனடியாக சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமிக்கு அனுப்பி வைத்தார். அவரது உத்தரவின் பேரில் இடைப்பாடி இன்ஸ்பெக்டர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்.

No comments: