Monday, August 15, 2011

பிரதமர் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை : அன்னா குழு குற்றச்சாட்டு.



லோக்பால் விவகாரம் குறித்த பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று அன்னா ஹஸாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது சுதந்திர தின உரையில், நமது நீதித்துறையை வலுவாக்காமல் நம்மால் ஊழலை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. உயர் மட்ட அளவில் ஊழலை ஒழிக்க கடுமையான, வலுவான லோக்பால் சட்டம் தேவை.

அதற்காக பட்டினி கிடப்பது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது ஊழலை ஒழிக்க உதவாது. இந்தியாவின் நீதித்துறையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதற்குத் தான் அன்னா குழுவினர் பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று அன்னா குழுவில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிடிஐக்கு கூறியதாவது,

பிரதமர் இறுதி நடுவர் போன்று பேசுகிறார். நீங்கள் போராட்டம் எல்லாம் நடத்தக் கூடாது என்கிறார். இது மக்களின் விருப்பத்திற்கு எதிராக லோக்பால் மசோதாவை அவர்கள் மீது திணிப்பது போன்றதாகும். லோக்பால் மசோதாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது தவறு என்கிறார்.

மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் நிராகரித்துள்ளதாகக் கணக்கெடுப்புகளும், வாக்கெடுப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

ஹஸாரே எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற காரணத்தை பிரதமர் தெரிவிக்கவில்லை. ஒரு போலியான மசோதாவை எதிர்த்து தான் இந்த போராட்டம். அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவுக்கு பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை பிரதமர் தெரிவிக்கவில்லை என்றார்.

No comments: