Saturday, July 30, 2011

மு.க. ஸ்டாலினை விடுவித்தது போலீஸ்.


திமுகவினரின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலினை விடுவிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது தமிழக அரசு.

இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் மதியம் 2 மணி வாக்கில் விடுவிக்கப்பட்டார். ஸ்டாலினுடன் வந்த பழனிமாணிக்கம் உள்ளிட்ட திமுக தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தனது கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ஆகஸ்ட் 1-ம் தேதி திமுக நடத்தவிருக்கும் பெரும் அறப்போரை நசுக்கவே என்னைக் கைது செய்துள்ளது அதிமுக அரசு," என்று கூறியிருந்தார்.

அவரது கைதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று பிற்பகல் அவரை போலீஸார் விடுவித்துவிட்டனர்.

ஸ்டாலின் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்பி, "ஸ்டாலினை நாங்கள் கைது செய்யவில்லை. மாணவர் ஒருவர் விபத்தில் இறப்பதற்குக் காரணமான சம்பவம் தொடர்பாக மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணனிடம் விசாரணை நடத்த வந்தோம்; அவரை ஒப்படையுங்கள் என்றோம்.

அதற்கு ஸ்டாலின் தரப்பு மறுத்ததுடன் தானாகவே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களை பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம். தற்போது, கலைவாணனை மட்டும் விசாரணைக்கு நிறுத்தி வைத்து, மற்றவர்களை விடுவித்துவிட்டோம்," என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, கலைவாணனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

No comments: