Saturday, July 30, 2011

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கைது .



திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த மாணவன் விஜய். நேற்று காலை திமுகவினர் நடத்திய சமச்சீர் கல்விக்கு ஆதரவான வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக வகுப்புக்கும் செல்லாமல், போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல், இந்த மாணவன் கிளரியம் என்ற கிராமத்திற்கு அரசு பேருந்தில் ஏறிச் சென்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து கவிழந்ததில் இந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 18 பேர் காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைக்கு மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி வெளியில் அனுப்பியதால்தான், அந்த மாணவன் அந்த பேருந்தில் செல்ல நேரிட்டது. மாணவர்களை வெளியே அனுப்பியது திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் காரில் செல்லும்போது கைது செய்துள்ளனர்.

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாரிடம், அப்பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், என்ன வழக்கு என்று கூறாமல் ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினரின் எதிர்ப்பை மீறிய போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்படியானால் தானும் வருகிறேன் என்று கூறி போலீஸ் வாகனத்தில் மு.க.ஸ்டாலின் ஏறினார். பூண்டி கலைவாணனுடன் மு.க.ஸ்டாலினும் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளதால் அப்பகுதியில் உள்ள திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி போகும் வழியில் உள்ள ஆலத்தம்பாடியில் போலீசார் பூண்டி கலைவாணனை கைது செய்தனர்.

இவர்களுடன் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்பி ஏகேஎஸ் விஜயன், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேர் காவல்துறை வாகனத்தில் ஏறினர்.

No comments: