Saturday, July 30, 2011

நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது !


சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த வழக்குகளில் அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரண் அடைந்து 3 நாள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் பிறகு சேலம் கோர்ட்டில் ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். அவரிடம் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தினமும் காலை 8 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினமும், நேற்று காலையும் அவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டு சென்றார். இன்று காலை கையெழுத்து போட 7-50 மணிக்கே அவர் போலீஸ் நிலையத்தில் காத்து இருந்தார். ஆனால் 8-05 மணி வரை அவர் வெளியே வரவில்லை.

திடீரென்று போலீஸ் நிலையம் முன்பு நூற்றுக் கணக்கான துப்பாக்கி ஏந்திய போலீசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே தி.முக. தொண்டர்களும் குவிந்து இருந்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. தொண்டர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷம் எழுப்பினார்கள்.

போலீசாருக்கும், தி.முக.வினருக்கும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அப்போது துணை போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா வந்தார். அதன் பிறகு வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். இதைப் பார்த்த தி.முக. தொண்டர்கள் ஆவேசம் அடைந்து வேன் முன்பு படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தி தி.மு.க. வினரை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். பின்னர் அவர் அய்யந்திருமாளிகையில் உள்ள 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீவித்யா வீட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை அடுத்த மாதம் 12-ந் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாலமோகன் ராஜ் என்பவரின் ரூ 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு

சேலம் நிலவாரப்பட்டியில் இருக்கும், பாலமோகன்ராஜ் என்பவரின் 20469 சதுரடி நிலம் சேலம், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்த இடத்தை அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனக்கு வேண்டும் என்று சொல்லுவதாக சொல்லி அனுப்பியதாக, பாரப்பட்டி சுரேசும், கவுசிகபூபதியும், 25.3.2007 அன்று தன்னை வந்து பார்த்து பேசியதாகவும், தனக்கு இடத்தை விற்க விருப்பமில்லை என்று சொன்னதாகவும், ஆனால் விடாமல் தொல்லை செய்து, 27.3.2007 அன்று காலையில், கவுசிகபூபதி தன்னை வந்து அழைத்துக்கொண்ட பூலாவாரியில் உள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுக்கு கூடிப்போனதாகவும், அங்கிருந்த வீரபாண்டி ஆறுமுகம் தன்னை அடித்து, மாரியாதையாக நிலத்தை எழுதி கொடுக்கவேண்டும் என்று மிரட்டியதாகவும், அன்று, மாலை கவுசிகபூபதியும், பத்திரம் எழுதும் சுந்தரமும் தன்னை வந்து பார்த்து நிலம் சம்பந்தமான விவரங்களை கட்டாயமாக பறித்துக்கொண்டு சென்றதாகவும், பின்னர், 28.3.2007 அன்று காலையில் தனக்கு சொந்தமான நிலத்தை எழுதிவாங்கிக் கொண்டதாகவும், நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நாற்பது இலட்சம் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டதாகவும் பாலமோகன்ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிலம், சேலம் மாவட்டகாவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வந்தாலும், பாலமோகன்ராஜ் இடத்தை பறித்தது, பத்திரம் பதிவு செய்தது எல்லாம் சேலம் மாநகர எல்லையில் வருவதால் இந்த வழக்கை சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்துள்ளார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம், அவரது அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி உட்பட எட்டுப்பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் வீரபாண்டி ஆறுமுகத்தை 306/1 உட்பட நான்கு பிரிவுகளில் கைது செய்துள்ளனர், சேலம் போலீசார்.

நேற்று இரவோடு இரவாக, சேலம் காவல்துறையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் விசிவாசியாக இருந்த காவல் துறை அதிகாரிகளான ஐ.எஸ்.இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் இருவரும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கும்,கிச்சிப்பாளையம் தங்கவேலு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மாற்றப் பட்டுள்ளார்கள்.

No comments: