Saturday, July 30, 2011

ஆடி அமாவாசை - அப்பாவுக்காக.....!



அமாவாசை


வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

ஆடி அமாவாசை

பித்ருக்களை வழிபட ஏற்ற காலம் ஆடி மாதம் இந்த மாதமே ஒரு புண்ணிய காலமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

தினசரி வாழ்வில் பல சோதனைகளை,தடைகளை சந்திக்கிறோம். இவற்றில் பல தோல்விகளுக்கு காரணமே தெரியாது. எதுக்கு இவ்வளவு கஷ்டம் நமக்கு மட்டும் வருது என வேதனைப்படுபவர்கள் பலர். அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையா மல் அவர்களின் ஆசி உங்கள் வம்சத்துக்கு கிடைக்காமல் இருந்தால் உங்கள் வம்சத்தில் பிறக்கும் ஆண்கள், பெண்கள் கடும் துன்பத்திற்கு ஆளாவார்கள். பெண்களுக்கு மண வாழ்க்கை முறிவு, ஆண்களுக்கு தொழில் பாதிப்பு, கடன், வேலை செய்யுமிடத்தில் பல பிரச்சனைகள் என சந்திப்பார்கள்.

இதை தவிர்க்க உங்கள் வம்சத்தில் உங்களுக்கு முன்னால் பிறந்து வாழ்ந்த உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்காக ஆற்றின் கரைகளிலோ, கடல் கரைகளிலோ பித்ரு பூஜை, பித்ரு பரிகாரம், பிண்டம் வைத்து வழிபாடு செய்தல் நலம்.

பித்ரு பூஜைக்காக லட்சக்கணக்கிலோ ஆயிரக்கணக்கிலோ செலவு செய்ய வேண்டாம். எள், மாவு, வாழைக்காய் என சில பொருட்களை பிராமணர்களிடம் கொடுத்து இதற்கு முன் வாழ்ந்த என் வம்சத்தார் 32 தலைமுறையினருக்கு ஒரே சமயத்தில் ஆத்ம சாந்தி செய்யலாம்.இதை ஆடி அமாவாசையில் செய்தால் இந்த பரிகாரம் உடனே உங்கள் முன்னோர்களுக்கு சென்று சேரும். மகிழ்ச்சியில் உங்களை ஆசிர்வாதிப்பார்கள்.

அதன் பின் வீடு வந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்து பிறகு உண்ணவும். அன்று மாமிசமோ, மதுவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அன்றைய தினம் இரவு உங்கள் வீட்டிற்கு உங்கள் முன்னோர் வருவர். நீங்கள் உங்கள் தாத்தா, பாட்டியிடம் அதிக பிரியம், பாசத்தோடு இருந்தீர்களா..? அவர்கள் நிச்சயம் அன்று இரவு உங்களை தேடி உங்கள் வீட்டிற்கு வருவார்கள். உங்கள் தலையை தொடுவார்கள். இது அனுபவ உண்மை. அவர்கள் திருப்தியாக இருந்தால் இது நடக்கும்.

உங்கள் குடும்பத்தினர் யாராவது விபத்து போன்ற அகால மரணம் அடைந்து இருந்தால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக பிண்டம் வைத்து வணங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உலகில் அவரது ஆத்மா சித்ரவதை படாமல் இருக்கும். ஆத்ம சாந்தியும் உண்டாகும். இல்லையெனில் அவர்களின் சிதைந்த உடலுக்கு திரும்ப அவர்கள் போராடுவார்கள். தங்கள் குடும்பத்தாரோடு பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். கண்ணீர் வடிப்பார்கள். தொட முடியாமல், தொடர்பு கொள்ள முடியாமல் வேதனையில் துடிப்பார்கள். அவர்களுக்கு கடவுளின் மடியில் தஞ்சம் புக நீங்கள் செய்யும் பிண்ட பூஜை மிக உதவியாக இருக்கும். என்ன நம்ப முடியவில்லையா. இது முற்றிலும் உண்மை.

தாய், தந்தை, தாத்தா, பாட்டிக்கு மட்டும்தான் பித்ரு பூஜை செய்யணுமா என்றால் இல்லை. இந்த உலகில் இறந்த எந்த மனிதருக்கும் நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். இதனால் அந்த உயிரின் ஆத்மா சாந்தியடையும் என சாஸ்திரம் சொல்கிறது.

தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய் விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா என்பது பலரது சந்தேகம்.

ஏனெனில்,எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.

இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.



பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.

ejaffna.blogspot.com

No comments: