Friday, June 17, 2011

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள அரசு தொடக்கப்பள்ளி.

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள    ஈரோடு அரசு தொடக்கப்பள்ளி;    என் மகளுக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று கலெக்டர் கண்டிப்பு

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தனது மகள் கோபிகாவை ஏழை பள்ளிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். கலெக்டரின் இந்த நடவடிக்கையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன் உள்ளனர்.

மேலும் முன் உதாரணமாக திகழ்ந்த கலெக்டருக்கு அடுத்தப்படியாக மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் உள்ளனர். ஈரோடு குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கும் தனது மகள் கோபிகாவை மற்ற குழந்தைகளை எப்படி கவனித்து படிக்க வைக்கிறீர்களோ... அப்படிதான் படிக்க வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்றும் கலெக்டர் ஆனந்தகுமார் பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறி உள்ளார்.

கலெக்டரின் குழந்தை குமலன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளின் பார்வையும் குமலன்குட்டை தொடக்கப்பள்ளியிலேயே பதிந்துள்ளது.

நேற்று அப்பள்ளிக்கு ஈரோடு பஞ்சாயத்து யூனியன் அலுவலர் வகிதா நேரில் வந்து, பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான தரமான சமையல் செய்ய வேண்டும். காய்-கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சத்துணவு சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தற்போது குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

கலெக்டர் மகள் நாங்கள் படிக்கும் பள்ளியில் எங்களுடன் படிக்கிறாள்... என்று மற்ற மாணவ- மாணவிகளும் பள்ளி குழந்தைகளும் தங்கள மழலை குரலில் உற்சாகத்துடன் கூறினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி கூறும் போது, கலெக்டரின் மகள் எங்களது பள்ளியில் படிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. சவாலாகவும் உள்ளது என்று கூறினார்.

மற்ற ஆசிரிய- ஆசிரியைகளும் கலெக்டர் மகள் கோபிகா... இப்போது எங்களது செல்லக்குழந்தை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் அதற்கு மேலாக எங்களது கல்வி சொல்லி கொடுக்கும் முறை இருக்கும். பொதுவாக எல்லா அரசு பள்ளிகளிலும் நன்றாகத்தான் சொல்லி கொடுக்கிறார்கள். கலெக்டரின் மகள் எங்கள் பள்ளியில் சேர்க்கப்பட்ட தன் மூலம் அரசு பள்ளிக்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறினர்.

நேற்று கலெக்டர் கோபிகா மகளுக்கு வீட்டில் இருந்து காரில் மதிய உணவு வந்தது. சீருடை கொடுத்த பிறகு கலெக்டர் மகளுக்கும் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிட கொடுக்கப்படும்.

No comments: