Friday, June 17, 2011

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் நகைகள், பணம் பறிப்பு .

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பணம் பறிப்பு: நகைகள்- பொருட்களை பொதுமக்கள் இழக்கும் பரிதாபம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டின் அழகை ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்து செல்கிறார்கள். கடந்த மே மாதம் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடந்தது. இதில் பல ஆயிரம்பேர் கலந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தனர்.

தற்போது சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் சனி, ஞாயிறு நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் ஏற்காட்டில் 10 பேர் கும்பல் ஒன்று சூதாட்டம் நடத்தி பணம், நகைகளை பறித்து வருகிறது. இவர்களிடம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த கனகராஜ், ராஜேந்திரன் கூறியதாவது:-

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் சிலர் திடீரென வருகிறார்கள். பூங்கா பகுதி, லேடீசீட் பகுதி, பக்கோடா பாயிண்ட் பகுதிகளில் ரோட்டு ஓரம் அமர்ந்து கொள்கிறார்கள்.

கூட்டம் அதிகம் வரும் நேரத்தில் சூதாட்டம் நடத்துகிறார்கள். இந்த சூதாட்டத்தை பார்ப்போர் என்ன கூட்டமாக இருக்கிறது என பார்க்க செல்லும்போது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கட்டாயப்படுத்தி அவர்கள் வைத்து இருக்கும் பணம், மற்றும் நகைகளை பறித்து கொள்கிறார்கள்.

உஷாராக இருப்பவர்களை மிரட்டி அனுப்பி விடுகிறார்கள். தாயக்கட்டை, சீட்டாட்டாம் உள்பட பல விளையாட்டுக்களை இவர்கள் நடத்தி இதன் மூலம் பணம் பறிக்கிறார்கள். பணம் இல்லை என்றால் நகையை தாருங்கள் நாங்கள் அடகு வைத்து பணம் பெற்று தருகிறோம் என மிரட்டி நகைகளை பறித்து சென்று விடுகிறார்கள்.

நகை, பணம் இல்லாதவர்களிடம் அவர்கள் வரும் மோட்டார் சைக்கிள் அல்லது மொபட்டுக்களை பறித்து கொள்கிறார்கள். இதை யாரும் தட்டி கேட்டால், அவர்களை தாக்கவும் செய்கிறார்கள்.

இவர்கள் மீது உடனே சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்ந்தால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வராத நிலை ஏற்பட்டாலும் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: