Friday, June 17, 2011

சாய்பாபா அறையில் வைரம், பண குவியல் ; வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

சாய்பாபா அறையில் வைரம், பண குவியல்; வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக மார்ச் மாதம் 28-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுமார் ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

சாய்பாபா, புட்டபர்த்தி ஆசிரமத்தில் உள்ள யஜுர் மந்திரில் வசித்து வந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்ச் 28-ந்தேதி அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப் படவில்லை.

இந்த நிலையில் சுமார் 2 1/2 மாதத்துக்குப் பிறகு சாய்பாபா அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது.சாய்பாபா அறையை திறக்கும்போது தங்களையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் சாய் பாபா அறக்கட்டளை கமிட்டியினர் அதை ஏற்கவில்லை.

நேற்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் பி.என்.பகவதி, ரத்னாகர், கிரி, சீனிவாசன் சத்யஜித் ஆகியோர் முன்னிலையில் சாய்பாபா அறை பூஜை நடத்தி திறக்கப்பட்டது. சாய்பாபா அறையின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது குவியல், குவியலாக பணக்கட்டுக்களும், வைரங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம், வைரம் மற்றும் பணத்தை தனித்தனியாக பிரித்து கட்டும் பணிகளில் சாய்பாபா கல்லூரியில் படிக்கும் 15 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் பணம் எண்ணும் கருவி கொண்டு வந்திருந்தனர். மாணவர்கள் எண்ணி கொடுத்த பணக் கட்டுக்கள், அந்த எந்திரம் மூலம் எண்ணப்பட்டன.

பிறகு நேற்று மாலை அந்த தங்கம், வைரம், பணக் கட்டுக்கள் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இன்று (வெள்ளி) வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: