Friday, June 17, 2011

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. விசாரணை : இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. விசாரணை: இங்கிலாந்து பிரதமர் கேமரூன் வலியுறுத்தல்

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிகட்ட போரில் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா. குழு, `இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது' என தெரிவித்தது.

இந்த நிலையில், இறுதிகட்ட போர் காட்சிகளை வீடியோவாக சேனல் 4 என்ற இங்கிலாந்து டி.வி. வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் அந்த வீடியோ பதிவில் சிங்கள ராணுவத்தின் காட்டுமிராண்டித் தனமான செயல்களை காட்சிகளாக காண முடிகிறது.

இதனால், பல்வேறு உலக நாடுகளும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இங்கிலாந்து வெளியுறவு மந்திரி அலிஸ்டர் பட், `இலங்கை போர்க் குற்றம் குறித்து நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.

இத்தகைய சூழ்நிலையில், இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த லீ ஸ்காட் என்ற எம்.பி, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், "இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் போரில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கான பணியில் இங்கிலாந்து பிரதமரும் என்னுடன் சேர்ந்து கொள்வாரா?''

என கேட்டார். அவருடைய கேள்விக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதிலளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- இலங்கை போர்க்கள காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை நான் முழுமையாக பார்க்கவில்லை.

ஆனால், அது மிகவும் அதி பயங்கரமானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை போரை இறுதி கட்டத்துக்கு கொண்டு செல்லும் போது, மிகவும் கவலையளிக்கக் கூடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. எனவே, இறுதிக்கட்ட போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை அடி ஆழம் முதல் முழுமையாக நாம் அறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான விசாரணையை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என உலகின் மற்ற அரசுகளுடன் இணைந்து இங்கிலாந்து அரசும் வலியுறுத்துகிறது. மேலும், இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணையும் அவசியம் என்றும் இங்கிலாந்து அரசு வற்புறுத்துகிறது.

அப்போது தான், எதிர் காலங்களில் அதுபோன்று நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேமரூன் தெரிவித்தார்.

No comments: