Wednesday, June 1, 2011

தயாநிதி-ஏர்செல் விவகாரம்: சிபிஐ விசாரணை ஆரம்பம்?


ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டது குறித்தும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய மலேசிய நிறுவனம் சன் டிவி குழுமத்தில் முதலீடு செய்தது குறித்தும் சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக இது குறித்து தெகல்கா இதழில் வெளியான செய்திகளை மையமாக வைத்து தயாநிதி மாறனுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில்,

2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகள் மாற்றப்பட்டன. இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயரித்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது.

தமிழகத்தில் ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு மண்டலத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 மண்டலங்களில் சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து பங்குகள் வாங்கியதால் ஆதாயமடைந்த இந்த மாக்சிஸ் நிறுவனம் தனது மற்றொரு நிறுவனமான அஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தயாநிதி விளக்க வேண்டும்.

2ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது. மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து தெகல்கா இதழ் வெளியிட்டுள்ள செய்தி அபாண்டமானது என்று அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்கனவே கூறி்யுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக தெகல்காவுக்கு அவர் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதே போல மாறனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜகவும் கோரியுள்ளது.

கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு:

இந் நிலையில் தயாநிதி மாறன் தொடர்பாக எழுப்பபடும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க மிகவும் பொருத்தமானவர் தயாநிதி மாறன்தான்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. பாஜக ஆட்சி உள்ளிட்ட கடந்த காலங்களில் தொலைத்தொடர்புக் கொள்கை பின்பற்றப்பட்ட விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகிறது.

எனவே தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அவை குறித்தும் அக் குழு விசாரிக்கும். பாஜக ஆட்சியிலிருந்த 1999ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தொலைத்தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்துள்ளது என்றார்.

இந் நிலையில் இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு தயாநிதி மாறனை அழைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிபிஐயும் விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக உள்ளிட்ட எதி்ர்க் கட்சிகள் போர்க் கொடி உயர்த்தலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே தயாநிதி-ஏர்செல் விவகாரம் குறித்து சிபிஐ அமைதியாக தனது விசாரணையை ஆரம்பித்துவிட்டதாகவும், தயாநிதி மாறனிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

வாஜ்பாய்க்கும் ஜேபிசி சம்மன்?:

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாஜகவையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக ஆட்சியில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு சேர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கவும் காங்கிரஸ் எம்பி சாக்கோ தலைமையிலான இந்தக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வாஜ்பாய் கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவருக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பது பாஜக தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: