Wednesday, June 1, 2011

கேரள கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மீது ஷூ வீச்சு.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் எடக்கரா பகுதியைச் சேர்ந்தவர் பென்னி, 37. இவர், நிலம்பூரில், பூட்டிக்கிடந்த மரத் தொழிற்சாலையில் இருந்து, பல பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீதான வழக்கு விசாரணை, நிலம்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தினேஷ் முன்னிலையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று, கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க, சிறையில் இருந்து பென்னியை போலீசார் அழைத்து வந்தனர்.

கோர்ட்டில், சாட்சி கூண்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார்.அவரது வழக்கு, பல மாதங்களாக விசாரணை முடியாமல் இருந்து வந்ததால், ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

அன்றைய தினமும் அவருடைய வழக்கை முதலில் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, வேறொரு வழக்கு விசாரணை முதலில் துவங்கியது.

ஏற்கனவே மெதுவாக நடந்து வரும் விசாரணையால், ஆத்திரத்தில் இருந்த பென்னி, தான் அணிந்திருந்த, "ஷூ'வை கழட்டி, மாஜிஸ்திரேட்டை நோக்கி எறிந்தார். ஆனால், இலக்கு தவறி, வேறொரு வழக்கு குறித்தான விசாரணை நடத்திக் கொண்டிருந்த வக்கீல் முனீர் என்பவரது பின்னந்தலையில் பட்டது.

இதை பார்த்து, கோர்ட்டில் இருந்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரும், செய்வதறியாது திகைத்தனர். பென்னி ஓடி விடாதபடி போலீசார் அவரை சூழ்ந்து கொண்டனர். இச்சம்பவம், அங்கு சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments: