Wednesday, June 1, 2011

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: வாஜ்பாய்க்கு “சம்மன்” அனுப்ப பாராளுமன்ற கூட்டுகுழு முடிவு.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, பாராளுமன்ற பொது கணக்கு குழு, பாராளுமன்ற கூட்டுக் குழு ஆகியவை தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இதில் பாராளுமன்ற கூட்டுக்குழு, காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு விரைவான விசாரணையை நடத்தி வருகிறது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் சமீபத்தில் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவரிடம், பா.ஜ.க. ஆட்சி நடத்த 1998-ம் ஆண்டு முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எப்படி செய்யப்பட்டது? என்பது பற்றி அறிக்கை தயாரித்து தருமாறு கூட்டுக்குழு தலைவர் சாக்கோ கேட்டுக் கொண்டார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொண்டதாக பா.ஜ.க. தலைவர்கள் ஏற்கனவே பல தடவை கூறி உள்ளனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஸ்பெக்ட்ரம் முடிவுகளில் தவறு நடப்பதை பா.ஜ.க. ஏற்கனவே சுட்டி காட்டியதையும், பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

என்றாலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க.வையும் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரையும் சாட்சிகள் பட்டியலில் பாராளுமன்ற கூட்டுக்குழு சேர்த்து இருக்கிறது. அதுமட்டுமின்றி சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது போல, வாஜ்பாய்க்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு முடிவு செய்து இருக்கிறது.

1999-ம் ஆண்டு சிறிது நாட்கள் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்ததால், அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகள் முழுமையாக தெரிந்து இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்ப தீர்மானித்துள்ளதாக சாக்கோ கூறினார்.

வாஜ்பாய்க்கு எப்போது சம்மன் அனுப்புவது என்ற முடிவை வரும் 6-ந் தேதி எடுக்கப் போவதாகவும் சாக்கோ கூறினார். வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்பதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். மிகவும் வயதாகி விட்ட வாஜ்பாய், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர அரசியலில் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் அவர் எந்தவித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் நன்கு பழகும் வாஜ்பாய்க்கு சம்மன் அனுப்ப சாக்கோ திட்டமிட்டிருப்பது பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

No comments: