Wednesday, June 1, 2011

1.65 லட்சம் என்ஜினீயரிங் விண்ணப்பம் விற்பனை: 50 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்பு.


பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் குறைவாகும்.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் ஒற்றை சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விற்பனை செய்யப்பட்டன. கடைசி நாளான நேற்று வரை மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

ஆன்-லைன் மூலம் 5 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 1.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக இந்த ஆண்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 4 ஆயிரத்து 541 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை அதிகமாக இருந்தது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் பி.இ. விண்ணப்ப வினியோகம் தொடங்கியதால் விண்ணப்ப விற்பனை குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய கல்லூரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை காட்டிலும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பி.இ. இடங்கள் அதிகரிப்பதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு 2.20 லட்சம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழு அச்சடித்து இருந்தது. ஆனால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆனதால் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வீணாகியுள்ளன.

இதுவரை 55 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க ஜூன் 3-ந் தேதி கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு குழுவிற்கு சேர்ந்து விட்டதை www.annauniv.edu/tnea2011என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பி.இ. விண்ணப்ப எண்ணை இணைய தளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் “டைப்” செய்யும் நிலையில், விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ளமுடியும்.

ஜூன் இறுதியில் தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்.

No comments: