Wednesday, June 1, 2011

கறுப்புப் பணம்: ராம்தேவின் உண்ணாவிரத திட்டத்தை கைவிட வைக்க 'தலைகீழாய் நிற்கும்' மன்மோகன் !


வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரியும் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஜூன் 4ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ள யோகா குரு பாபா ராம்தேவை சமாதானப்படுத்த பிரதமர் மன்மோகன் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் லோக்பால் சட்டத்தைத் திருத்தக் கோரியும் சமூக சேவகர் அன்னா ஹசாரே சமீபத்தில் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவருக்கு நாடு முழுவதும் கிடைத்த ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டுவிட்டது.

அவரது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைக்காவிட்டால், தேசிய அளவில் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஹசாரே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள் அடங்கிய லோக்பால் வரைவு மசோதா குழுவை நியமித்தது.

இந்நிலையில் நாட்டை சுரண்டும் ஊழல்வாதிகளுக்கு, கறுப்புப் பணம் வைத்திருப் போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளக் கோரி யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் குதித்துள்ளார்.

முதலில் அன்னா ஹசாரேவைப் போலவே இவரையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், தேசிய அளவில் இவருக்குக் கிடைத்துவிட்ட ஆதரவைக் கண்டு அதிர்ந்து போயுள்ள மத்திய அரசு, அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது.

வரும் ஜூன் 4 தேதி முதல் டெல்லி ராம் லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் துவக்கினால், அவருக்கு நாடு முழுவதுமே ஆதரவ அலை உருவாகும், இதனால் தேசிய அளவில் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சமூக அமைப்புகளும் பாபா ராம்தேவை தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து பிரதமரும் பிரணாப் முகர்ஜியும் ஆலோசனை நடத்தி, கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய வருமானவரித் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவை புதிதாக உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ராம்தேவ் போராட்ட அறிவிப்பையடுத்தே இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ராம்தேவ் திருப்தி அடைய வில்லை. வெறும் குழுக்களை அமைப்பதால் மட்டுமே தனது கோரிக்கைக்கு நியாயம் கிடைக்காது என்றும் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

ஆனாலும் எப்படியாவது அவரது உண்ணாவிரதத்தைக் கைவிட வைக்கும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் பிரதமர். முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவரை பாபாவிடம் நேரில் அனுப்பி வைத்த பிரதமர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கினார்.

ஆனால், இப்படியெல்லாம் என்னை ஏமாற்றிவிட முடியாது என்று கூறிவிட்ட ராம்தேவ், திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதம் தொடங்கும் என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர வேண்டியதி்ல்லை என்று கூறி, அன்னா ஹசாரேவின் முக்கிய கோரிக்கையை மட்டும் பாபா நிராகரித்தார். இதனால் இவரை வைத்து லோக்பால் குழுவை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று இன்று டெல்லி வந்தார் ராம்தேவ்.

இதையடுத்து அவருக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ஐஸ் வைக்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கியது. டெல்லி வந்த அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர்.

அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கறுப்புப் பண விவகாரத்தில் பிரதமரின் கருத்தை பிரணாப் முகர்ஜி இவரிடம் விளக்கவுள்ளார். இதையடுத்து உண்ணாவிரதத் திட்டத்தை பாபா கைவிடுவாரா அல்லது திட்டமிட்டபடி தொடங்குவாரா என்பது தெரியவரும்.

அன்னா ஹசாரேவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மத்தியஅரசு, இப்போது ராம்தேவிடம் மாட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments: