Wednesday, June 1, 2011

தப்பிப்பாரா தயாநிதி ?



அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, 2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான்.

இந்த நடைமுறை, ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷனின் அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுவதால், தயாநிதி கையில் இத்துறை இருந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி சுழன்றடிக்கிறது .

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரையிலான நடைமுறைகளை விசாரிப்பதற்காக மத்திய அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 மார்ச் 5-ம் தேதி , 8 ஏரியாக்களுக்கு யுஏஎஸ்எல் எனப்படும் உரிமம் கோரி சிவா குரூப் நிறுவனத்தின் சிவசங்கரனின் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) விண்ணப்பித்தது. அப்போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். விண்ணப்பிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஏழு ஏரியாக்களுக்கான உரிமங்களுக்கு கையெழுத்தானது. மத்தியபிரதேசம் மாநிலத்திற்குக் கோரப்பட்டிருந்த உரிமம் மட்டும் கையெழுத்தாகவில்லை.

2004 ஏப்ரல் 21-ந் தேதியன்று உ.பி. (கிழக்கு), உ.பி. (மேற்கு) பகுதிகளில் உரிமம் கோரி டிஷ்நெட் விண்ணப்பித்தது. இந்நிலையில், டிஷ்நெட் நிறுவனத்தின் மதிப்பு, அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து 2004 மே 5-ந் தேதியன்று கேள்வி எழுப்பிய தொலைத் தொடர்புத்துறை, மத்தியபிரதேசத்திற்கான உரிமத்தையும், மற்ற பகுதிகளுக்காக போடப்பட்ட விண்ணப்பத்தையும் நிறுத்தி வைத்தது.

தே.ஜ.கூ. ஆட்சிக்குப்பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2004 மே 26-ந் தேதியன்று தயாநிதி மாறன் பொறுப் பேற்றார். ஜூன் மாதத்தில், தொலைத் தொடர்புத்துறை கேள்விகளுக்கு விரிவான பதிலைத் தாக்கல் செய்தது டிஷ்நெட் நிறுவனம். இதனைப் பரிசீலித்த தொலைத் தொடர்புத்துறை செயலாளர், உ.பி. மேற்கு- கிழக்கு பகுதிகளுக்கான விண்ணப்பம் குறித்தும் ம.பி. மாநிலத்திற்கான லைசென்ஸ் வழங்குவதற்கான அவகாசம் குறித்தும் ஒப்புதல் தெரிவிக்கும் திட்டத்தை முன் வைத்தார். இந்த திட்டம், அமைச்சர் தயாநிதி மாறன் முன்வைக்கப்பட்டது.

அவருடைய செயலாளர், 2004 மார்ச் 24 அன்று டிஷ்நெட் நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் ஈக்விட்டி குறித்து விளக்கம் கேட்டு நோட் போட்டார். அதற்கும் டிஷ்நெட் விரிவான விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், 2005 மார்ச் 1ஆம் நாள் ஹரியானா, கேரளா, கொல்கத்தா, பஞ்சாப் மாநிலங்களில் உரிமம் கேட்டு டிஷ்நெட் விண்ணப்பித்தது.

அதே மாதம் 30ஆம் நாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் ஒரு நோட் போட்டார். அதில், தொலைத்தொடர்பு அமைச்சருடன் (தயாநிதி) ஆலோசித்ததில், துறை சார்பிலான நோட்டீஸ்கள், அறி வுறுத்தல் கடிதங்களுக்கு உரிய பதிலளிக்கக் கோரி விண்ணப்பதாரரின் ஃபைல்கள் அனைத்தும் திருப்பி அளிக்கப் படுகின்றன என்று தெரிவித்திருந்தார். இதன்பின், எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் டிஷ்நெட் நிறுவனத்தின் ஃபைல்கள்மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் அவை தொலைத் தொடர்புத்துறையின் பல பகுதிகளிலும் சுற்றியது.

அதே நேரத்தில், தொலைத்தொடர்புத்துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 2005ஆம் ஆண்டில் மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்ட மேக்ஸிஸ் குரூப் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை வாங்குவதற்காக சிவா குரூப் சிவசங்கரனை அணுகியது. அதே ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, உரிமங்கள் வழங்குவதற்கான புதிய வழி காட்டுதல்களை தொலைத் தொடர்புத் துறை அறிவித்தது. இதன்மூலம் ஏற்கனவே இருந்த பல கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன.

2005ஆம் ஆண்டு 30ஆம் நாள் ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனம் ஏற்பதாக கையெழுத்தானது. இதையடுத்து, ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் தொலைத்தொடர்புத் துறையில் அவசரமாக பரிசீலிக்கப்பட்டன. அதன்பின் கர்நாடகா, ராஜஸ்தான், மும்பை, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, குஜராத், என எல்லா மாநிலங்களுக்கும் உரிமம் கோரியது ஏர்செல். 2ஆண்டகளாக நிலுவையில் இருந்த பீகார், ஹிமாச்சல்பிரதேசம் மாநிலங்களுக்கான உரிமங்கள் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று மத்தியபிரதேசம் உள்பட 14 சர்க்கிள் களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பான கடிதம் அளிக்கப்பட்டு, 15 நாட்களில் அதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1,399,47 கோடி ரூபாயை செலுத்தி உரிமங்களைப் பெற்ற ஏர்செல் நிறுவனம், இந்தியாவின் முன்ன்னி செல்போன் நிறுவனமாக மாறியது.

இந்த உரிமங்கள் வழங்கப்பட்ட நான்கே மாதங்களில், அதாவது 2007 பிப்ரவரி மாதத்தில் அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் நிறுவனத்தின், துணை நிறுவனங்களில் ஒன்றான சவுத் ஏசியா என்டர்டெய்ன்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனம், கலாநிதிமாறனின் சன் குரூப் நிறுவனத்தின் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் - சன் டி.டி.ஹெச்சில் சுமார் 600 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. சன் எஃப்எம் ரேடியோ நெட்வொர்க்கில் சுமார் 100 கோடி ரூபாயை மேக்ஸிஸ் குரூப் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாயை சன் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இயல்பாக நடந்தவையா என தெஹல்கா பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றையின் மதிப்பு சுமார் 22,000 கோடி ரூபாய். ஆனால் அந்நிறுவனம் 1,399 கோடி ரூபாய் மட்டுமே செலுத்திப் பெறுகிறது. இதில் சுமார் 20,600 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதலில் வந்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்பது ராசா மீதுள்ள குற்றச்சாட்டு அதேபோலத்தான், ஏர்செல் நிறுவனத்திற்கும் தயாநிதிமாறனால் குறைந்த கட்டணத்தில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன.

ஒதுக்கீட்டின் பிரதிபலன் என்ற கோணத்தில் பார்த்தால் ராசா மீதான வழக்கில் உள்ளவை அனைத்தும் தயாநிதிமாறனுக்கும் பொருந்துகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

2ஜி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தனது 3வது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் சோனியாவை தயாநிதிமாறன் சந்தித்தது டெல்லி முதல் சென்னை வரை பரபரப்பை ஏற்படுத்தினாலும், தயாநிதி மேற்கொண்ட சரணாகதி படலம்தான் சோனியாவுடனான சந்திப்பு என்கிறது டெல்லி வட்டாரம்.

நன்றி - நக்கீரன்.

No comments: