Sunday, April 3, 2011

ரன் வறட்சியைப் போக்கி, கோப்பைக் கனவையும் நனவாக்கிய கேப்டன் டோணி.

எல்லோரும் பேட் செய்கிறார்கள், டோணி என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கு நேற்று அட்டகாசமான, ஆணித்தரமான முறையில் அருமையான பதிலளித்து விட்டார் கேப்டன் டோணி. நேற்று அவரது பேட்டிங் பிரளயத்தால்தான் இலங்கையை நசுக்கி, இந்தியா தனது 28 ஆண்டு கால கோப்பைக் கனவை நனவாக்க முடிந்தது.
India won World Cup
Getty Images
இந்தத் தொடர் முழுவதுமே டோணியிடமிருந்து பெரியஅளவில் ரன்கள் வரவில்லை. மேலும், அவரது முடிவுகள் பலவும் கூட வி்மர்சிக்கப்பட்டன. குறிப்பாக நேற்றே கூட அஸ்வினுக்குப் பதில், ஸ்ரீசாந்த்தை சேர்த்தது கூட விமர்சிக்கப்பட்டது. ஆனால் தன்னை நோக்கி வீசப்பட்ட ஒட்டுமொத்த கேள்விகளுக்கும் தனது அசாத்தியமான பேட்டிங் மற்றும் அரிய வெற்றியின் மூலம் ஆணித்தரமாக பதிலளித்து விட்டார் டோணி.

நேற்று அவர் போட்டியை முடித்து வைத்த விதம் அட்டகாசமானது. அழகான ஒரு சூப்பர்ப் சிக்ஸரை விளாசி இந்தியாவை உற்சாகத்தின் உச்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டார் டோணி.

இந்தத் தொடர் முழுவதுமே 6வது நிலை வீரராகத்தான் களம் இறங்கினார் டோணி. அவருக்கு முன்பு யுவராஜ் சிங் வருவார். அதன் பின்னர்தான் டோணி இறங்குவார்.

ஆனால் நேற்று ஆச்சரியமளிக்கும் வகையில் 5வதாக அவர் களம் இறங்கினார். அப்போது இந்தியா இக்கட்டான நிலையில் இருந்தது. 3 முக்கிய விக்கெட்களை இழந்து 114 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. இதனால் தானே களம் இறங்கி அணியை மீட்க முடிவு செய்து யுவராஜுக்குப் பதில் அவரை இறங்கி விட்டார் டோணி.

அதேபோல களத்தில் குதித்தது முதல் கடைசி வரை மிகுந்த மன உறுதியோடும், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற வெறியோடும் ஆடினார் டோணி. அவரும் கம்பீருமாக சேர்ந்து போட்ட 100 ரன் பார்ட்னர்ஷிப்பிலிருந்தே டோணியின் வெற்றி தாகத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது ரசிகர்களால். சும்மா, சொல்லக் கூடாது, இருவரும் சேர்ந்து ஆடியது மிகப் பிரமாதமாக இருந்தது.

வெற்றி கிட்டுமா என்ற சந்தேகத்தில் இருந்தவர்களை ரிலாக்ஸ் ஆக்கி, சந்தோஷத்தைக் கொண்டாட தயார்படுத்தி விட்டனர் கம்பீரும், டோணியும். கம்பீர் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், டோணி அதிரடிக்குத் தாவி பின்னி எடுத்து விட்டார்.

குறிப்பாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரது கையில் சிக்கி கடுமையாக தண்டிக்கப்பட்டனர். திஷரா பெரைரா, மலிங்கா ஆகியோரின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.

டோணியை அடக்க இலங்கை கேப்டன் சங்கக்காரா செய்த அத்தனை உத்திகளும் தவிடுபொடியாக்கி விட்டன. 2 சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் 79 பந்துகளில் 91 ரன்களைக் குவித்து நிமிர்ந்து நின்றார் டோணி, ஆட்ட முடிவில்.

யுவராஜ் சிங்குக்குப் பதில் டோணிநேற்று களம் இறங்கியதற்கு முக்கியக் காரணம், அப்போது இலங்கை இரண்டு ஆப் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைக் கலைக்க முயற்சித்ததே. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டாம் என்று நினைத்தார் டோணி. இதனால்தான் யுவராஜுக்குப் பதில் அவரே இறங்கி விட்டார். ஆனால் அதிர்ஷ்டம் டோணியின் பக்கம் இருந்ததால் தப்பித்தார். ஒருவேளை அவரது முடிவு தப்பாகப் போயிருந்தால் விமர்சகர்களின் வாயில் சிக்கி வறுத்தெடுக்கப்பட்டிருப்பார் டோணி. போட்டியின் முடிவில் அவரே இதை சிரித்தபடி கூறினார்.

ஆரம்பத்தில் மிகவும் கவனமாகத்தான் ஆடினார் டோணி. இந்தியாவின் நிலை வலுப்பட்ட அடுத்த விநாடியே அவர் அதிரடிக்குத் தாவினார். இலங்கை பந்து வீச்சு வெளுக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவர் போட்ட இரண்டு சிக்ஸர்களும் சூப்பர்ப்.

அதிலும் முத்தையா முரளிதரனின் பந்துகளை அவர் அடித்து நொறுக்கியபோது மைதாமே குலுங்கிப் போய் விட்டது. அதுவரை நன்றாகத்தான் பந்து வீசிக் கொண்டிருந்தார் முரளி. ஆனால் டோணியிடம் சிக்கிய அவரது சுழற்பந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளிதரன் முன்பு விளையாடியபோது கிடைத்த அனுபவத்தை வைத்து முரளியின் பந்து வீச்சை சிதறடித்து விட்டார் டோணி.

நேற்றைய அதிரடி ஆட்டம் மூலம் தன் மீதான விமர்சனத்தைத் துடைத்து, தனது பேட்டிங் பிரளயத்தையும் மீட்டு, இந்தியாவின் 28 ஆண்டு கால கனவையும் நனவாக்கி, ஒரே 'ஸ்டிரோக்கில்' பல சிக்ஸர்களை அடித்து விட்டார் டோணி.

No comments: