Sunday, April 3, 2011

நான் முதலமைச்சரா? கலைஞர் பேச்சு.




வேலூர் கோட்டை மைதானத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

வேலூர் கோட்டைவெளி மைதானத்தில், திமுக அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி அவர் சனிக்கிழமை இரவு பேசியது:

நான்கு, ஐந்து நாள்களுக்கு முன் அரசியலை தொடங்கியவர்களையும், 75 ஆண்டுகாலம் பொதுத் தொண்டு ஆற்றி, மக்களோடு இருந்து அடக்குமுறைகளை ஏற்று இந்த சமுதாயத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னை போன்றவர்கள், சிறைச் சாலைகள் சித்திரவதை கூடங்களாக இருந்தாலும், சிரித்த முகத்தோடு ஏற்று இந்த சமுதாயத்துக்காக இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கும் கழகத்தினரோடு,

4, 5 நாள்களுக்கு முன்பு அரசியலை தொடங்கியவர்களோடு பொருத்திப் பார்த்து, இவர்கள் இந்த நாட்டில் அரசியல் நடத்துகிறார்களே என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் எண்ண வேண்டாமா?


எனக்கு ஒன்று, இரண்டல்ல 87 முடிந்து 88 வயது நடக்கிறது. 75 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். நான் சந்தித்து உறவாடிய, நட்பு கொண்டிருந்த நண்பர்கள் பலர் உள்ளனர். அவர்களில் சிலர் பிரிந்து விட்டார்கள். பிரிந்து விட்டார்கள் என்றால் என்னை விட்டு அல்ல. உலகை விட்டு பிரிந்து விட்டனர். இயற்கை எய்திவிட்டனர்.

கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள், வேறு கட்சியில் உள்ள அவர்களுக்கும் புகழஞ்சலி செலுத்துகிறேன் என்றால் அதுதான் தமிழ் பண்பாடு என்பதால் கூறுகின்றேன்.

உள்ளத்திலே எதற்கும் அஞ்சாமல் பாடுபடுகின்ற என்னை யார் யாரோ தூசாக கருதி பொடி, பொடியாக்கி விடுவோம் என்று கூறுகின்றனர்.

அழகிரியை கைது செய்யுங்கள் என போலீஸ் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதை இன்றைய மாலை பத்திரிகையில் பார்த்தேன். எப்படி அவர் உத்தரவிடுகிறார்? யாருக்கு யார் உத்தரவிடுவது?.

தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என்ற பெயரால் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. வெளியே போவதற்கும், வருவதற்கும் அனுமதி வாங்க வேண்டும். எனக்கே சந்தேகம் வருகிறது. இதை இங்குள்ள வேட்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்ற பெயரில் ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடைபெறுகிறது. நண்பர் ஞானசேகரன் (காங்கிரஸ்) போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், அவர்களெல்லாம் புரிந்துகொண்டால்தான் என்னுடைய வேதனை, என்னுடைய கவலை போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரும்.

மக்களாகிய நீங்கள் என்னை தேர்ந்தெடுத்து முதல்வராக அமர வைத்திருக்கிறீர்கள். எனக்கு இப்போது ஏற்பட்ட சந்தேகம் இதுதான். இப்போது நான் முதலமைச்சரா? தமிழ்நாட்டை என் தலைமையில் உள்ள திமுக ஆள்கிறதா? தேர்தல் ஆணையம் ஆள்கிறதா? என்பதுதான்.


எனக்கே சந்தேகம். என்னை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கியது நீங்கள், நான் முதலமைச்சரா? தமிழ்நாட்டை என் தலைமையிலான தி.மு.க. ஆண்டு கொண்டு இருக்கிறதா? அல்லது தேர்தல் ஆணையம் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறதா? என்று சந்தேகம் எழுகிறது.


தேர்தல் ஆணையத்தை நான் பகைத்துக்கொள்ள மாட்டேன். அதனுடன் நான் மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டால் அதை யாரும் குறை கூற மாட்டார்கள். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி அணிகளையெல்லாம் ஒன்று திரட்டி அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலர் - மன்னிக்க வேண்டும் இங்கு யாராவது இருந்தால் - பூணூலை உருவிக்கொண்டு பாடுபடுகிறார்கள்.

தி.மு.க. தேசிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளோடு போட்டியிடுகிறது. நான் சொன்னதை எல்லாம் செய்துள்ளேன். நான் பெரியாரின் பரம்பரை, அண்ணாவின் வழி வந்தவன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சுயமரியாதை உணர்வு, திராவிட உணர்ச்சியை, என் இதயத்தில் இருந்து யாரும் அழிக்க முடியாது. அந்த உள்ள உணர்வை தான் நாங்கள் வெளிபடுத்துவோம்.

இது வேட்பாளர்களுக்கு தெரியும். தோழமை கட்சியினர் அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தலில் போட்டுயிடுகிறவர்கள் எதை சொல்லி ஓட்டு கேட்கின்றனர்.

நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கூறி ஓட்டு கேட்கிறோம். நல்லாட்சியை தொடருவோம் என்று கேட்கிறோம். நாங்கள் 6-வது முறையாக தொடர்வோம். ஏழை, எளிய மக்களுக்கு நல்ல திட்டங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்கிறோம்.

அந்த அம்மையார் ஆட்சியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இரவு, பகல் பாராமல் கைது செய்யப்பட்டனர். போலீசார் இரவில் படுக்கை அறையில் இருந்த என்னை கைது செய்து சென்னை சிறையில் அடைத்தனர். அந்த ஆட்சி தொடர வேண்டுமா? என்னால் நியமிக்கப்பட்ட சாலை பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார்.

என்னுடைய பல்வேறு திட்டங்களை சிதைத்து, உடைத்து ரத்து செய்தார். அந்த கட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் இந்த திட்டம் தேவை இல்லை என்று நீங்களே வழிமொழிகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

நீங்கள் என்னை மறந்தாலும், துரத்தி விட்டாலும் நாங்கள், உங்களை மறக்க மாட்டோம், உங்களை விடமாட்டோம். உங்களை சிம்மாசனத்தில் உட்கார வைப்போம். எனவே உங்கள் நண்பர்கள், வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். வெற்றி நிச்சயம் பெற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.


No comments: