Sunday, April 3, 2011

குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகம் செழிக்கும்: ஜெயலலிதா.




திருநெல்வேலி நகரம் வாகையடி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வீ. பழனி, நான்குனேரி தொகுதி சமக வேட்பாளர் நாராயணன், ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் எஸ். ராயப்பன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு வேனில் இருந்தபடி ஜெயலலிதா பேசியதாவது:

இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் நடைபெறும் தேர்தல் அல்ல. நாட்டு மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதற்கான தேர்தல். அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்கான தேர்தல்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவசி உயர்ந்துள்ளது. அதை குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் விலை ஒரு ஆண்டில் மட்டும் 9 முறை ஏற்றப்பட்டு லிட்டருக்கு ரூ. 15 வரை உயர்ந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளை மூலம் ரூ. 50 ஆயிரம் கோடியையும், கிரானைட் மூலம் ரூ. 80 ஆயிரம் கோடியும் சம்பாதித்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு லோடு ரூ. 2,500 ஆக இருந்த மணல் விலை இப்போது ரூ. 13 ஆயிரமாக உள்ளது. சிமெண்ட் விலை மூட்டை ரூ. 150ல் இருந்து ரூ. 280 ஆக உயர்ந்துள்ளது.

ரூ. 3 ஆக இருந்த செங்கல் இப்போது ரூ. 6 ஆக உயர்ந்துள்ளது. இனிமேல் கனவில்தான் வீடு கட்ட முடியும். மின் உற்பத்தியைப் பெருக்கவில்லை. மின்சாரம் உபரியாக இருந்த நிலை மாறி இப்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின்வெட்டால் தொழில்கள், விவசாயம், ஜவுளி உற்பத்தி ஆகியன முடங்கி நலிவடைந்து வருகின்றன.

சட்டம், ஒழுங்கு என்பதே இல்லை. தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல. மக்களை அடக்கி ஆளுகிறது கருணாநிதியின் குடும்பம்.

தமிழ்நாட்டின் மொத்தக் கடனை ரூ. 1 லட்சம் கோடியாகப் பெருக்கிவிட்டார் கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ. 1.80 லட்சம் கோடி ஊழல் செய்து சுரண்டப்பட்டுவிட்டது. அது யாருடைய பணம்? நாட்டு மக்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் செலவிடப்பட வேண்டிய பணம். அந்தப் பணம் அரசுக்கு வந்திருந்தால் நாடு வளர்ச்சி பெற்றிருக்கும், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பொருளாதாரம் மேம்பட்டிருக்கும். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.

கருணாநிதி 5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தும் நாட்டு மக்களுக்குப் பயன் இல்லை. அவரது குடும்பத்தினர்தான் பயனடைந்துள்ளனர். தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, பத்திரிகைகள், திரைப்படம் தயாரிப்பு, விமானங்கள், எஸ்டேட்டுகள் என உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உள்ள அவரது குடும்பத்தார் உலகில் முதலாவது பணக்காரராக வர வேண்டும் என்பதே அவரது இலக்கு. ஆனால் உங்கள் நிலை என்ன? மக்கள் ஏழ்மையில் தத்தளிக்கின்றனர். விலைவாசி, மின்வெட்டால் நிம்மதி இழந்துள்ளனர்.

நிலங்களைத் திமுகவினர் ஆக்கிரமித்து வருகின்றனர். ரியல் எஸ்டே, திரைப்படத்துறையை கபளீகரம் செய்து வருகின்றனர். ஒரு குடும்பம் வாழ்வதற்காக 7 கோடி மக்கள் துன்பப்படுவதா? கருணாநிதியை இப்படியே விட்டால் தமிழ்நாடே அவரது குடும்ப வசமாகி விடும். உங்களை விரட்டப் பார்க்கும் அவரை நீங்கள் விரட்ட வேண்டும். கருணாநிதியின் குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். மக்கள் ஆட்சி மலர்ந்து குடும்ப ஆட்சி ஒழிந்தால்தான் தமிழகம் செழிப்பாக இருக்கும். அதற்கு ஜனநாயகத்தில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

மதுரையில் தேர்தல் அதிகாரிகளும், ஊழியர்களும் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் பணிநிரவல் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். சிறுபான்மை மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வித்திட்டது எனது தலைமையிலான ஆட்சியில்தான்.

கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு அவர்களுக்கு உரிய பலனை அளிக்காததால் அவர்கள் அதைத் திரும்ப ஒப்படைத்து விட்டனர். இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம். இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்போம். வஃக்பு வாரிய சொத்துகள் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

ஸ்ரீரங்கத்தில் வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த இலவச அறிவிப்புகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் இக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தினார்.

No comments: