Sunday, April 3, 2011

ஆ.ராசா உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் - வருவாய் இழப்பு 30,984 கோடி மட்டுமே .

குற்றப்பத்திரிகை ஆவணத்தை செய்தியாளர்களிடம் சனிக்கிழமை காட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள்.




2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், "முதலில் வந்தவருக்கே முன்னுரிமை'' என்ற அடிப்படையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத்தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உள்பட 9 பேர் மீது மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்த நடவடிக்கை யால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 30,984 கோடி ரூபாய் மட்டுமே என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு ருக்கிறது.

சிறப்பு நீதிமன்றம்: தில்லியில் இதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் சனிக்கிழமை இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

80,000 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் குலாம் இ வாஹன்வதி, அதிகாரத் தரகர் நீரா ராடியா உள்பட 125 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மாத இறுதியில் கூடுதல் குற்றப்பத்திரிகை: இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ. அமைப்பு இந்த மாத இறுதிக்குள் கூடுதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதாகவும் மே 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் விசாரணையை முடித்து விடுவதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தது.

நீதிபதி திருப்தி: இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை படித்துப் பார்த்ததாகவும் இந்த வழக்கைத் தொடர போதிய காரணங்களும் ஆதாரங்களும் இருப்பதாகத் தமக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் இனி வழக்கு விசாரணையைத் தொடரலாம் என்றும் நீதிபதி ஓ.பி. சைனி குறிப்பிட்டார்.

9 பேர் மீது குற்றப்பத்திரிகை: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, அத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் ஆகியவை அந்த 3 நிறுவனங்கள்.

ஏமாற்றுதல், கையெழுத்து மோசடி, கிரிமினல் சதித்திட்டம், ஊழல் ஆகிய குற்றங்களைச் செய்திருப்பதாக ஆ. ராசா, அவருடைய தனிச் செயலர் ஆர்.கே. சண்டோலியா, பெகுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன ஊக்குவிப்பாளர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருக்கிறது.

ஐக்கியப்படுத்தப்பட்ட தொடர்பு சேவைக்கான உரிமங்களும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தால் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் பிரிவுகளின்படி குற்றங்கள் நடந்திருப்பது புலனாகிறது என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டுகிறது.

மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநர் வினோத் கோயங்கா, குடுகாமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் யூனிடெக், தமிழ்நாட்டில் உள்ள யூனிடெக் வயர்லெஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் கெüதம் தோஷி, 2 மூத்த துணைத் தலைவர்கள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

ஏப்ரல் 13-ல் ஆஜராக சம்மன்: இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டு ஆனால் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளவர்கள் இம் மாதம் (ஏப்ரல்) 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

மிக அதிகப் பயன் அடைந்த நிறுவனம்: இந்த முறைகேடு காரணமாக மிக அதிக அளவுக்குப்பணப் பயன் அடைந்த நிறுவனம் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனம் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. யூனிடெக் வயர்லெஸ் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் நிறுவனமும்தான் இந்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பெறும் தகுதி (திறன், அனுபவம் போன்றவை) இல்லாதவை என்றும் குற்றப்பத்திரிகைத் தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் களப்பணிகளைச் செய்தது என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.

கலைஞர் டி.வி. கண்காணிக்கப்படுகிறது: கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட், சினியுக் பிலிம்ஸ், கிரீன் அவுஸ் பிரைவேட் லிமிடெட், குசேகாவோன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களால் கண்காணிக்கப்படுவதாக நீதிபதியிடம் சி.பி.ஐ. தெரிவித்தது.

கனிமொழி, தயாளு அம்மாள் பங்குதாரர்: கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முறையே 20, 60, 20 சதவீதப் பங்குகள் இருப்பது நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் தொடர்புள்ள சட்டவிரோதப் பணம் பல்வாவின் நிறுவனத்திலிருந்து சினியுக் பிலிம்ஸ், குசேகாவோன் நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்குக் கிடைத்தது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டுகிறது.

குசேகாவோன் புரூட்ஸ், வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் மார்ச் 29-ம் தேதி கைது செய்யப்பட்டனர். சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.200 கோடியை கலைஞர் டி.வி.க்கு அனுப்பிவைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

சாதிக் பாட்சா மர்ம மரணம்: கிரீன் அவுஸ் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் ஆ. ராசாவின் நண்பருமான சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. போலீஸôர் சென்னையில் விசாரணை நடத்தினர். அவர் கடந்த மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் கிரீன் அவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த மர்மமமான பணப்பரிமாற்றத்துக்கும் பாட்சா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருத்து தெரிவித்தது.

2009-ல் வழக்குப்பதிவு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 2009 அக்டோபர் 21-ம் தேதி சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. தொலைத் தொடர்புத் துறையின் பெயர் தெரியாத அதிகாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை எதிரிகளாகக் குறிப்பிட்டு அந்த அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. ஆனால் விசாரணை வேகமாக நடைபெறவில்லை. பொதுநலன் கோரி சிலர் தாக்கல்செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரம் காட்டத் தொடங்கியதால் இந்த விசாரணை வேகம் பிடித்தது.

சி.ஏ.ஜி. கணிப்பு: ஏல முறையில் அல்லாமல் முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதனால்தான் இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: