Monday, April 4, 2011

புற்று நோயை உண்டாக்கும் அணு உலைகள.

ஜப்பானைத் தாக்கிய சுனாமி அந்நாட்டை பேயாட்டம் ஆடித் தீர்த்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கி விட்டது. அது ஜப்பான் நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி அகில உலக பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது.

ஜப்பானின் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பூகோஷிமா, டோகாய், ஒனகாவ அணுமின் நிலையங்கள் வெடித்து சிதறியதும் அதனால் ஏற்பட்ட கதிர்வீச்சும்தான் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதி நவீன தொழில்நுட்பத்துக்கு பெயர் போன ஜப்பானிலேயே இந்த விபத்து நடந்திருப்பது ஒட்டு மொத்த உலகத்தையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.

அணு மின்சாரம் அணுஉலையில் யுரேனியம் என்ற கதிரியக்க பொருளிலிருந்து வெளிப்படும் நியூட்ரானை திரும்ப யூரேனியத்தின் மேல் செலுத்தும்போது மூன்று மடங்கு நியூட்ரான் கிடைப்பதோடு 220 மெகாவாட் வெப்ப ஆற்றலும் கிடைக்கிறது. மூன்று மடங்கு நியூட்ரான் தொடர் இயக்கமாக பல்கி ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த ஆற்றல் அணு உலைகளில் காரியத்தகடு மற்றும் கரிக்கட்டைகளால் மட்டுப்படுத்தப்படுகிறது.

அணு உலையில் கிடைக்கும் வெப்பம் கனநீரால் நீராவியாக்கப்பட்டு மின்சார ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதா? இந்தியாவில் கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் மகாராஷ்டிராவிலும் அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. ஜப்பானில் 40-க்கும் மேற்பட்ட அணுஉலைகள் உள்ளவை குறிப்பிடத்தக்கது.

ஆனால் நமது நாட்டில் உள்ள அணுஉலைகள் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டவை. திடீரென இணைப்பு துண்டித்தாலும் தானாகவே குளிரூட்டி இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 31 மீட்டர் உயரமான சுவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.யுரேனியத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கத்தை திடீரென செயலிழக்கச் செய்ய முடியும். அப்படி யுரேனியத்தின் கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்ய போரிக் அமிலம் பயன்படுகிறது.

போரிக் அமிலம் நியூட்ரான் பாய்சன் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு அணுஉலைகளுக்கான குளிரூட்டி செயல் படாத நிலை ஏற்படுமானால் தானியங்கியாக இந்த போரிக் அமிலம் அணுஉலைகளுக்கு சென்று சேரும் வண்ணம் போரிக் அமிலம் குளம் தயாராக அணுஉலைக்கும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எந்த ஒரு சமயத்திலும் எந்த ஒரு சூழ்நிலை யையும் பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது என்கிறார் துளிகள் சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு தலைவர் திருத்தணிகாசலம்.

ரஷ்யாவில் உள்ள உக்ரைனில் செர்னோவில் என்ற இடத்தில் அணுஉலை விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த கதிர்வீச்சின் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, மூளை புற்று நோய், ரத்த புற்றுநோய், தைராய்டு பாதிப்பு உணரப்பட்டது. பொதுவாக கதிர்வீச்சு ஏற்பட்டால் ஆல்பா, பிட்டா, காமா கதிர் வீச்சாக வெளிப்படுகிறது.காமா கதிர்வீச்சால் மனித உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுகிறது.

பின்னர் இது புற்றுநோயாக மாறும். இந்நோய் அடுத்த தலை முறையைக் கூட பாதிக்கும் ஆபத்து உள்ளது.ஜப்பானில் சுனாமி காரணமாக நடந்த உணு உலை வெடிப்பால் உலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. அணு கதிர்வீச்சு அமெரிக்கா, கொரியா நாடுகள் வரை பரவியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்கிறார் டி.எம்.ஜே.ஏ.டி. அறக்கட்டளை தலைவரும் சமூக ஆராய்ச்சியாளருமான மாதா மலை திருமேனி.

இவர் நம்நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலைகள் அமைப்பதற்கு எதிராக போராடி வருகிறார். அவர் கூறியதாவது:-

கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் மக்கள் வசிக்காத தீவு பகுதிகளில் அமைத்து, அங்கிருந்து கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு வரலாம். தற்போது இயங்கிவரும் அணுமின் நிலையங்களை படிப்படியாக செயல் இழக்கச் செய்வது நல்லது. புதிய அணுமின் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மனித உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணுமின் நிலையங்களை அமைக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? மின்சார பற்றாக்குறையை சமாளிக்க காற்றாடி ஆலைகள், சூரிய மின்சாரம், அனல் மின்நிலையங்கள், இயற்கை எரிவாயு மின்திட்டங்கள் அதிக அளவில் அமைக்கலாம்.

இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீர்வளம் நன்றாகவே உள்ளது. இதற்காக நதிநீர் இணைப்பு திட்டத்தை அவசர கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும். இதன்மூலம் பல இடங்களில் நீர் மின்சக்தி திட்டங்களை உருவாக்கலாம். தற்போது அணுமின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் நீர் மின்சக்தி நிலையங்களில் பணி அமர்த்திடலாம்.

நீர் மின்சக்தி திட்டங்களால் மின்சாரம் கிடைப்பதுடன், விவசாயம், தொழில் வளம், நிலத்தடி நீர், குடிநீர் போன்றவை பல மடங்கு பெருகும். மற்ற நாடுகளைவிட நம் நாட்டில்தான் சூரிய ஒளி அதிகம் கிடைக்கிறது. எனவே சூரிய ஒளி மின்சக்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடிக்கணக் கான மக்களின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அணு உலைகளை அமைக்க நம் நாட்டு தலைவர்கள் எதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது புரியவில்லை.

உயிருக்கு வேட்டு வைக்கும் அணுமின் நிலையங்களை அப்புறப்படுத்தி, மற்ற மின் திட்டங்களை அவசரகால அடிப்படையில் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்னொரு சுனாமியோ அல்லது பூகம்பமோ ஏற்பட்டால் அணு உலைகள் வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகும் அபாயம் உள்ளது.

இதனால் நாம் அணு உலைகளுக்கு விடை கொடுப்போம். மனித உயிர்கள் அழியாமல் பாதுகாப்போம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த சமூக ஆராய்ச்சியாளர் மாதாமலை திருமேனி. `துளிகள்' சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, டி.எம்.ஜே.ஏ.டி. அறக்கட்டளை அமைப்பு உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அணு உலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவில் உள்ள அணுமின் உலைகள் பூகம்பம் சுனாமி பெரிய அளவில் தாக்கப்படும்போதும் பாதிக்காத தொழில் நுட்பம் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் இத்தகைய எந்தவொரு தொழில்நுட்பமும் திடீரென நிகழும் இயற்கை சீற்றங்களை தாக்குபிடிக்குமா? என்பது சந்தேகமே. என்னதான் தானியங்கி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் ஜப்பானில் உள்ள அணுமின் நிலையங்களில் இவை செயலற்று போனது என்பதே உண்மை. எனவே இதனை மேலும் செம்மைப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இப்போது உள்ள அணுமின் நிலையங்கள் முழுக்க முழுக்க பாதுகாப்பானவை. மிக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் விபத்தே நடக்காது என்றும் அமெரிக்கா, ரஷியா கூறுவதை நமது விஞ்ஞானிகளும் வழிமொழிகிறார்கள் என்றாலும் ஒரு சந்தேகம்.

நவீன தொழில் நுட்பம் விபத்தே நடக்காது என்றால் அணுசக்தி மசோதாவில் அணுஉலை விபத்து நடந்தால் 500 கோடி ரூபாய்க்கும் மேல் தர வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற சொல்லி அமெரிக்கா மற்றும் சர்வதேச அணுசக்தி கமிஷன் இந்தியாவுக்கு ஏன் நெருக்கடி தரவேண்டும். எனவே நமது விஞ்ஞானிகள் அமெரிக்க, ரஷ்யா விஞ்ஞானிகள் சொல்வதை அப்படியே நம்பாமல் பாதுகாப்பு முறைகளில் மேலும் கவனம் செலுத்தவேண்டும்.

No comments: