Monday, April 4, 2011

கருத்து கணிப்பு ஜெயிக்காது; மக்கள் கருத்துதான் ஜெயிக்கும்! - வடிவேலு


"கருத்து கணிப்பு வெளியிடுவதால் எதிரணிக்கு தேர்தல் வெற்றி வந்துவிடப் போவது இல்லை; மக்கள் கருத்துதான் வெற்றியைத் தரும். அந்த வெற்றி திமுகவுக்குதான்'' என்று தூத்துக்குடி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். காலையில் திருச்செந்தூரில் பிரசாரம் தொடங்கினார். பல்வேறு ஊர்களில் ஆதரவு திரட்டிவிட்டு, பழையகாயல், முத்தையாபுரம் வழியாக பகல் 1 மணி அளவில், தூத்துக்குடி அண்ணாநகருக்கு வந்தார்.

அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டகள் மத்தியில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து பேசினார். அப்போது நடிகர் வடிவேலு கூறியதாவது:

அடிப்படை தேவைகள்

"எல்லோரும் என்னயப் பார்த்து சிரிக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நான் விளையாட்டு பொம்மையாக இருக்கேன். நீங்கள் தினமும் என்னை டி.வி.யில் பாக்குறீ்ங்க. ஆனா, உங்களை பார்க்கிற வாய்ப்பை எனக்கு நம்ம கலைஞர் கொடுத்து இருக்கிறார்.

எல்லா மக்களுக்கும் அடிப்படை தேவையான உணவு, உடை, வீடு அவசியம். இது எதுவும் கிடைக்காத மக்களுக்கு அடிப்படை தேவைகளை கலைஞர் செய்து கொடுத்து உள்ளார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் கலைஞர் திட்டங்களை பார்த்து என் மனம் குளிர்ந்து விட்டது.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்திருக்கிறார். ஏழை மாணவ-மாணவிகள் படிக்க சமச்சீர் கல்வி, இலவச சீருடை என்று பல திட்டங்களை தந்து உள்ளார். 108 ஆம்புலன்சு திட்டம் மூலம் ஏராளமான உயிர்கள் பிழைத்து உள்ளன.

பல்... செல்...

பல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது செல் (செல்போன்) இல்லாமல் இருக்க முடியாது. செல்போன் இருப்பதால் அவசரம் கருதி, மக்கள் எளிதாக 108 ஆம்புலன்சை அழைத்து விடுகின்றனர். அந்த திட்டத்தால் உயிர் பிழைத்தவர்களின் வாழ்த்துக்களாலேயே கலைஞர் 108 வயதுக்கு மேல் வாழ்வார்.

வீட்டுக்கு பெரியவர் இல்லாமல் சிறப்பு இல்லை. அதே போன்று தமிழகத்துக்கு ஒரு பெரியவராக தலைவர் கலைஞர் உள்ளார். காமராஜர், பெரியார், அண்ணா இப்போது இல்லை. ஒரே தலைவராக கலைஞர் உள்ளார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று அங்கு உள்ள சிறந்த திட்டங்களை பார்வையிட்டு இங்கு வந்து செயல்படுத்துகிறார்.

எதிர் கூட்டணியில் குழப்பம்

எதிர் கூட்டணி குழம்பிப் போய் இருக்கிறது. அவர்களால் கலைஞர், நிழலைக் கூட நெருங்க முடியாது. முதல்வர் இருக்கை என்ன மியூசிக்கல் சேரா? தலைவர் என்பதற்கு தகுதி வேண்டும். தலைவர் என்று கூறிக் கொள்கிற ஒருவர் வேட்பாளரை அடிக்கிறார். அவர் ஜெயித்தால் மக்கள் அவரிடம் திட்டங்களை பெற முடியுமா?

கருத்து கணிப்பு வெளியிடுகிறார்கள். அதன்படிதான் நடக்கப் போகிறதா? மக்கள் கருத்துதான் வெற்றியை தேடித்தரும். தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்க போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தென்மாவட்டங்களின் தேர்தல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவர் மு.க.அழகிரி. ஸ்பிக் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுத்தார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

எல்லா மக்களிடமும் எழுச்சி உள்ளது. ஆகையால், வருகிற 13-ந் தேதி அன்று தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்...", என்றார் வடிவேலு.

வடிவேலு கூட்டத்தில் கல்வீச்சு

இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வடிவேலு மீது சரமாரியாக

கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு திமுக வேட்பாளர்களை ஆதரித்து இரவில் வடிவேலு பேசிக்கொண்டி ருந்தார். அப்போது, விஜயகாந்த் ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான் என்று வடிவேலு கூறியபோது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஆனால் கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

வடிவேலு விஜயகாந்த்தை காட்டுத்தனமாக விமர்சனம் செய்து வருகிற போதிலும், இதுவரை விஜயகாந்த், வடிவேலு குறித்து ஒரு வார்த்தை கூட பதிலுக்கு தரம் தாழ்ந்து விமர்சிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: