Thursday, April 21, 2011

போலீஸ் ஜீப்பில் தப்பியோடிய வடிவேலு : பிரசார கலாட்டா .



தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, தி.மு.க., தலைமையால் முக்கியத்துவம் தரப்பட்டு, பிரசாரத்தில் களமிறக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. இவர் பேச்சைக் கேட்க திரண்ட கூட்டமும், தன் பாணியில் அவர் செய்த பிரசாரமும், தி.மு.க.,விற்கு பெரிய பலமாக அமைந்தது.

"குழந்தைகள் முதல், பெரியவர் வரை எல்லா கட்சியிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அரசியல் பிரசாரம் செய்யப் போய், ரசிகர்களை இழந்து விடாதீர்கள்' என, நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தியும், வடிவேலு தேர்தல் களத்தில் குதித்தார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கும், வடிவேலுவுக்கும் நடந்த மோதல் தான், அவரை அரசியல் பக்கம் தள்ளிவிட காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்வாக வடிவேலு அமைந்தது தான், கட்சியில் அவருக்கு பெரிய முக்கியத்துவத்தை பெற்றுத் தந்துள்ளது என்கிறது, தி.மு.க., வட்டாரம்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் தன் பிரசாரத்தை துவக்கிய வடிவேலு, தி.மு.க., கூட்டணிக்காக பத்து நாட்கள் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வெளுத்து வாங்கி, தி.மு.க., தலைமையிடம், "சபாஷ்' பெற்றுள்ளார்.

அவரது பிரசாரம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள்:

வடிவேலுவின் பிரசார பயணத்தில், ஒரு மேனேஜர் தலைமையில், இரண்டு இணை இயக்குனர்கள், நான்கு உதவியாளர்கள், பாதுகாப்புக்கு, 12 பேர் கொண்ட குழுவும் சென்றது.

மார்ச் 31ம் தேதி, சென்னையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து காரில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிரசாரத்தை வடிவேலு துவங்கினார். முதல் கூட்டத்திலேயே, எம்.ஜி.ஆர்., திரைப்படப் பாடல்களை பாடியும், விஜயகாந்த் தன்னை சங்கடப்படுத்தியதை, "சென்டிமென்ட்' ஆகவும் பேசி, மக்களிடம் கைதட்டு வாங்கினார்.

போடிநாயக்கனூரில், வேனில் பேசிவிட்டு புறப்படும் போது, "இன்னும் பேச வேண்டும், இங்கிருந்து போகக் கூடாது' என்று சொன்ன ரசிகர்கள், திடீரென்று, பிரசார வேனை பின்னோக்கி இழுத்துச் செல்ல, பாதுகாப்பு குழுவினரால் தடுக்க முடியாமல் போனது. வேனும், முன்னோக்கிச் செல்ல முடியாமல் பழுதடைந்து நின்றுவிட்டது.

பயந்து போன வடிவேலும், மேனேஜரும் சற்று தொலையில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி தப்பினர். "கொஞ்சம் அசந்திருந்தால் மக்கள் என்னோட காலு, கை, கண், காது மூக்கை பிச்சுக்கிட்டு போய் வீட்டில வச்சு, இது தான் வடிவேலுவின் மூக்கு, வாய், கை, தலைன்னு காட்டிக்கிட்டிருந்திருப்பாங்க. மக்கள் இவ்வளவு பிரியம் வைத்திருப்பாங்கன்னு நான் நினைக்கவேயில்லை' என்று, உதவியாளர்களிடம் பின்னர் சொன்னார் வடிவேலு.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு சளி தொல்லையால், மூச்சுவிட முடியாமல் திணறிய வடிவேலுக்கு, டாக்டர் வரவழைக்கப்பட்டு இரண்டு ஊர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை, இரவு என, மூன்று வேளைகளிலும், இந்த உணவு மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கொடுத்த உணவை சாப்பிட்டார். காலையில் டிபனோடு மட்டன், சிக்கன் அயிட்டங்களையும் ஒரு பிடி, பிடித்தார். அவர் சாப்பிடும் அனைத்து அயிட்டங்களையும், தன் உதவியாளர்களுக்கும் கொடுக்கச் சொன்னார்.

மூன்றாவது நாள் பிரசாரத்தின் போது, வடிவேலுக்கு தொண்டை புண்ணாகி, பேச சிரமப்பட, பசும்பாலில் மஞ்சள், மிளகுத் தூள் கலந்து கொடுத்தனர். அதில், தொண்டை சரியாகியது. "பிரசாரம் முடியும் வரை, இதே கலவை பால கொடுத்து விடுங்கள்' என்று கேட்டு வாங்கி குடித்தார்.

நன்றி - vizhiyepesu.blogspot.com

No comments: