Thursday, March 31, 2011

எந்தக் கட்சியும் சொல்லாத இலவசக் கல்வி..

ற்போது நடந்து வரும் அரசியல் கூத்துகளில் மிக முக்கியமானது, இலவச அறிவிப்புகளே.

இந்தத் தேர்தல் போட்டியில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு 'இலவச' வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.

தாய்மார்களுக்காக மிக்சி, கிரைண்டர், மின்விசிறியும் அடுக்கப்பட, இளைய சமுதாய வளர்ச்சிக்காக என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இலவச லேப்டாப் திட்டம்!

இலவச வண்ணத் தொலைக்காட்சி எந்த அளவுக்கு கள்ளச் சந்தைகளில் விற்கப்பட்டதோ அதே அளவுக்கு இந்த லேப்டாப்பும் விற்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

எது எப்படி இருப்பினும் இன்றைய இளைய சமுதாயம் முன்னேற இது அவசியம் தானா? என்ற கேள்வியை தொடுத்தால் இதை விட 'அடிப்படை அவசியம்' ஒன்று நம் கண்களில் படுகிறது.

அதுவே, இலவசக் கல்வி.

இன்றைய இளைய தலைமுறையே நாளைய தூண்கள். அவர்கள் அனைவருக்கும் தேவை தரமான கல்வி மட்டுமே.

தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளன. அவர்களுக்கு எல்லாம் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற நினைப்பு உண்மையிலேயே இந்த அரசியல் கட்சிகளுக்கு இருந்தால், அவர்கள் மனதில் எழக்கூடிய முதல் திட்டம் 'அனைவருக்கும் இலவசக் கல்வி' என்பதாக மட்டுமே இருக்கும்.

சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தனது ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கொடுத்திருந்த ஒரு குறிப்பு மிகவும் சிந்திக்க தகுந்தது.

'பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் இலவச மேற்படிப்பை அரசு அளிக்க முன்வருமேயானால், ஆண்டொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.20,000 சராசரி செலவாக எடுத்துக் கொண்டால், முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ரூ.2,000 கோடியும், இரண்டாம் ஆண்டு இரண்டு ஆண்டு மாணவர்களுக்கும் மொத்தமாக ரூ.4,000 கோடியும், மூன்றாவது வருடம் மூன்று ஆண்டு மாணவர்களுக்கும் சேர்த்து ரூ.6,000 கோடியும் செலவாகும். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் மொத்தமாக ரூ.8,000 கோடி செலவு ஏற்படும்.

இதுதான் அவரது சிந்தனை. இதனை கல்வி கற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சுலப தவணையில் திருப்பி செலுத்துமாறு செய்தால் அரசுக்கு முதல் கிடைத்து விடும். அதன் வட்டியாக ஏழை மாணவனின் வாழ்க்கை மேம்படும்!

இத்தகைய திட்டத்தால் வீட்டுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்கிட முடியும். கல்வியறிவு இல்லாதவரே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை நம்மால் எதிர்காலத்தில் கொண்டு வந்துவிட முடியும்.

இதனை அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் செயல்படுத்தினால், அத்தனை பேரும் அரசுப் பள்ளியை தேடி வருவர். கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் காணாமல் போய்விடும்.

ஆனால், இதைப் போன்ற திட்டத்தை எந்த தமிழக கட்சியும் சொல்ல முயலவில்லை. அரசியல்வாதிகளில் பலரும் ஒரு வகையில் கல்வி தந்தை ஆகவும், சுயநிதி பல்கலைகழகத் துணைவேந்தர்களாகவும் இருப்பதால் தங்கள் கல்வி வியாபாரம் பாதிக்கும் என்று இப்படிச் சிந்திக்கவில்லை போலும்.

கல்வி அறிவைக் கொண்டு வந்தால், தமிழன் சிந்தித்து விடுவான். அதன்பின் இந்த இலவச ஏமாற்று வேலைகள் எல்லாம் எடுபடாது அல்லவா!?

இந்த இலவசங்களை கொடுத்து மக்களின் முன்னேற்றம் பற்றி எண்ணாமல் ஏமாற்ற துணியும் அரசியல் வியாபாரிகள், ஆபிரகாம் லிங்கனின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

"மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துவதே மக்களாட்சி."


1 comment:

Pranavam Ravikumar said...

Yes I agree what you said. Democracy is Of the people, By the people, For the people!!!!