Tuesday, March 29, 2011

தேமுதிக வேட்பாளரை அடித்து, உதைத்த விஜயகாந்த்.

தருமபுரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த விஜயகாந்த். கூட்டத்தில் கொடிபிடித்து நின்றிருந்த கூட்டணிக் கட்சியான விஜய் நற்பணி மன்றத்தினரை கொடியினை இறக்கச் சொல்லி கூச்சலிட்டார். பின்னர் குடிபோதையில் அருவருப்பாக பேச பெண்கள் கூட்டம் முகம் சுளித்ததை காணநேர்ந்தது.

இதனிடையே தொடர்ந்து பேசிவந்த விஜயகாந்த் வேட்பாளரின் பெயரை பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று உளறிக்கொட்டினார். திடுக்கிட்ட வேட்பாளர் அண்ணே என்பேரு பாண்டியன் இல்லைன்னே பாஸ்கர் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே சொல்லிவிட, நிதானம் இழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்து, கோபம் கொண்ட விஜயகாந்த் வேட்பாளர் பாஸ்கரனை நாகரீகமின்றி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைத்தார். திடீரென விஜயகாந்த் நிதானமில்லாமல் இப்படி நடந்து கொண்டது, வாக்காளப் பெருமக்களாகிய, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

மேற்கண்ட வீடியோ மக்கள் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது.

கடந்த தேர்தலின் போதும் இதே மாதிரி பொதுமக்கள் முன்னிலையில் தமது கட்சிக்காரரை திருச்சியில் அடித்ததும், பின்னர் நிருபர்கள் முன்னிலையில் அவர் தமது இளமைக்கால நண்பர் என்றும், நான் இப்படித்தான் அவரோடு அடித்து விளையாடுவேன் என்று பூசிமெழுகிய சம்பவம் நினைவிற்கு வந்து செல்கிறது.

தனது கட்சியில் கருணை உள்ளத்தோடு பெரும்பாலும் ஏழைகளுக்கே வாய்பளித்திருப்பாக சில தினங்கள் முன்பு பேசியிருந்தார் விஜயகாந்த். இது முழுக்க முழுக்க உண்மை இல்லையென்றாலும் கூட, இங்கொன்றும், அங்கொன்றுமாக சில இருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவோம். தருமபுரி வேட்பாளர் அவற்றுள் ஒருவராக இருப்பின் விஜயகாந்தின் இந்த நாகரீகமற்ற செயலை எப்படி எடுத்துக்கொள்வது?எனும் கேள்வி பெரிதாக எழுகிறது.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் வேந்தாக நாம் எப்படி விஜயகாந்தை எண்ணமுடியும்? அடித்து, உதைத்து, அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தலைமைப் பண்பா என்றால், தலைமைப் பண்பு என்பது இதுவல்லவே. அப்படியாயின் வடிவேலு சொல்வது போல விஜயகாந்த் ஒரு லூசுப் பீசா?

எப்படியோ விஜயகாந்த் நிதானமற்றவர் என்று வடிவேலு மேடைதோறும் பேசிவருவது நிரூபணமாயிருக்கிறது.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வீடியோ, பிற தொலைக்காட்சிகளுக்கும் சற்று நேரத்தில் கிடைத்துவிடும் என அறியப்படுகிறது. முயன்றால் பார்க்கலாம்.