Tuesday, March 29, 2011

விஜயகாந்த் - ராமதாஸ் மோதல்.

இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான் :விஜயகாந்த்

இருக்கிற அரசியல்வாதிகளில் நான் யோக்கியமானவன்தான். போன தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்றும், இந்த தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்றும் தி.மு.க.வினர் கூறுகின்றனர். அதை ஒத்துக்கொள்கிறேன்.

‘கோடிகளை வாங்கிக்கொண்டு விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொண்டார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் கோடிகளுக்காக கூட்டணி வைக்கவில்லை. மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகதான் கூட்டணி வைத்தேன். ஆகவே அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

நான் ஏன் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன் என்று கேட்கிறார்கள். எனது மானசீக குருநாதர் எம்.ஜி.ஆர். அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கருணாநிதியை எதிர்த்து போராடுகிறேன்.

நான் சமாளித்துவிடுவேன்; நீங்கள் சமாளிப்பது கஷ்டம்: விஜயகாந்த் பேச்சு

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் நாடு நாடாக இருக்கும். இன்று விலைவாசி விண்ணை முட்டுகிறது.

விலைவாசி உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாவின் வழிவந்தவர்கள் என்று கூறி ஏமாற்றுபவர்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

சிப்பாய் கலகம் நடந்த இந்த வேலூரில் மக்கள் தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை அபகரிக்க தி.மு.க.வினர் முயல்கின்றனர். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் சமாளித்து விடுவேன்.

பொதுமக்களாகிய நீங்கள் சமாளிப்பது கஷ்டம். எனவே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

விஜயகாந்த்.. அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் : ராமதாஸ்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார்.

தமிழகத்தில் கட்சி நடத்தும் ஒரு நடிகர் என்னைப் பற்றி பல இடங்களில் பேசி வருகிறார். என் மீது அவதூறாக ஏதேதோ பேசுகிறார். இதுநாள் வரை அவருக்கு நான் பதில் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். அந்த நடிகர் அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர். அரசியலில் மழலையர் கல்வி கூட படிக்கவில்லை. அவர் என்னை பற்றி பேசுவதா?

மரங்களை வெட்டி நாசமாக்கிவிட்டு பசுமை தாயகமா?

பா.ம.க. வினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கினார்கள். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.

சினிமாவில் கூட மரக்கன்று நடாத விஜயகாந்த்: ராமதாஸ்

சினிமாவில் நடிப்புக்காக கூட மரக்கன்று நடாத நடிகர் விஜயகாந்த், பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

என்னை அறிக்கை மன்னன், போராட்ட மன்னன் என நடிகர் ஒருவர் (விஜயகாந்த்) விமர்சனம் செய்து வருகிறார். என்னை கொச்சைப்படுத்துவதாக நினைத்து அப்படிப் பேசுகிறார். நான் அறிக்கை மன்னன்தான். சமூக விழிப்புணர்வுக்காக, அடிதட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அறிக்கை மூலம் குரல் கொடுப்பவன்.

பசுமை தாயகம் சார்பில் மழைநீர் சேகரிப்புக்காக 600 க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம். சினிமாவில் நடிப்புக்காக கூட அவர் மரக்கன்று நட்டதில்லை. அப்படிப்பட்டவர் பசுமை தாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கும் பாமகவுக்கு குரங்கு குணம்: விஜயகாந்த்

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விஜயகாந்த் மக்களுக்காக எந்த சிறை சென்றார்?-ராமதாஸ்


சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிட மட்டுமே போராடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்? என்று கேள்வி எழுப்பினார் ராமதாஸ்.

தனது கல்யாண மண்டபத்தை இடித்ததற்காகவும், சினிமா திரையரங்கில் தனது படத்தை திரையிடவும் மட்டுமே போராடிய அவர், மக்களுக்காகப் போராடி எந்த சிறைக்கு சென்றார்?

மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல நூறு போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றவன். பாளையங்கோட்டை சிறையைத் தவிர பிற சிறைகளைப் பார்த்தவன். என்னை என் கட்சியினர் போராளி என்று அழைப்பதையே விரும்புபவன்.

ராமதாஸ் தனது சமூகத்துக்கு செய்தது என்ன?-விஜயகாந்த்

தன்னை நம்பிய சமுதாய மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன செய்தார்? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றிருந்தபோது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலோ, கல்லூரிகளிலோ மருத்துவம் சார்ந்த அமைப்புகளிலோ பாமக தங்களது சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பை ஏன் ஏற்படுத்தித் தரவில்லை?

நான் 200 கோடி, 300 கோடி ரூபாய் வாங்கிவிட்டு கூட்டணி சேர்ந்து விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

எங்கள் கூட்டணிக்குள் பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் சண்டை மூட்ட பார்க்கிறார். 3-வது அணி உருவாகி வருகிறது. என தவறான தகவல்களை சிலர் பரப்பினர். தி.மு.க கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறவர்களை ஒன்று சேர்த்தவன் இந்த விஜயகாந்த்.

இந்த தேர்தலில் பணம் முக்கியமல்ல. நாம் சட்டை காலரை தூக்கிவிட்டு, நிமிர்ந்து நடக்க வேண்டும். அதற்கு அனைவரும் அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை, முரசு சின்னங்களில் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க.வினர் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் உங்களை எத்தனை நாள் காப்பாற்றும் என்று பார்க்கலாம். ஆனால் விஜயகாந்தை உங்களால் பணம் கொடுத்து வாங்க முடியவில்லை. உங்களிடம் கோடி, கோடியாக பணம் இருக்கலாம். என்னிடம் கோடிக்கணக்கான மனங்கள் இருக்கிறது

டாக்டர் ராமதாஸ் சுயலாபத்துக்காக பசுமைத் தாயகம் அமைப்பை நடத்துகிறார். அவரை நம்பிய சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்?

மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி வந்த நான், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சியுடன்தான் நான் கூட்டணி வைத்துள்ளேன். கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் இன்றைக்கு கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என கூறுகிறார்கள்

நிதானத்துடன் பேசுங்க...!- விஜயகாந்த்துக்கு குரு எச்சரிக்கை

நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும், நிதானத்துடன் பேச வேண்டும், என்று ஜெ. குரு எச்சரித்துள்ளார்.வன்னியர் சங்கத் தலைவரும் பாமக முக்கியப் பிரமுகருமான காடுவெட்டி ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வ செயல்திறனை தனது திரைப்படத்தால் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று பாழடித்த விஜயகாந்த், பாமக இளைஞர்களையும், மக்களையும் மரம் நடச் சொல்வதை விமர்சிப்பது அவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. நிதானம் இல்லாத போக்கையும் காட்டுகிறது.

மக்களோடும், தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று இவர் சுயநினைவோடு பேசியிருந்தால், சட்டசபைக்கு நிதானமின்றி வருகிறார் என்று கூறிய ஒருவரோடு கூட்டு சேர்ந்திருப்பாரா? நிதானம் தவறி கூட்டு சேர்ந்த இவருக்கு, பாமக கூட்டணி சேர்ந்தது பற்றி வர்ணிக்க எந்த தகுதியும் கிடையாது.

போராட்டம், சிறைவாசம் என்று தியாக தழும்பேறிய தமிழ் சமுதாயத் தலைவர்களை, மயக்க நிலையில் நிதானமின்றி அவர் விமர்சிப்பதை தமிழ் சமுதாயம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

அஸ்திவாரம் இல்லாத கூட்டணி மீது நின்று கொண்டு கூக்குரலிடும் இந்த மனிதரின் வரம்பு மீறிய பேச்சு, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தை கொந்தளிக்க செய்துள்ளது. தேர்தல் களத்திலே உள்ள நமது இளைஞர்களின் கவனம் தேர்தல் பரப்புரையிலும், நமது வெற்றியிலும்தான் இருக்க வேண்டும். '....... பேச்சு, விடிந்தால் போச்சு' என்ற சொல்லுக்கு உதாரணமாய் விளங்கும் இத்தகைய நபரின் பேச்சால் கவனம் திசை திரும்பிவிட வேண்டாம்
விருத்தாசலம் வாக்காளர்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். ஆனால் ரிஷிவந்தியம் மக்கள் ஏமாற மாட்டார்கள். தங்களையும், தங்களின் உரிமை போராட்டத்தையும் இழிவுப்படுத்தி பேசிய நடிகருக்கு பாடம் புகட்ட இந்த பின்தங்கிய மக்கள் தயாராகிவிட்டனர். இனியாவது நடிகர் விஜயகாந்த் தனது வாய்துடுக்குதனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். நிதானத்துடன் பேச வேண்டும். இதனை இந்த மக்களின் சார்பில் எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு ஜெ. குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments: