Tuesday, March 29, 2011

செல்போன் வியாபாரிகள் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு.

செல்போன் இறக்குமதி செய்ததில் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில மாதங்களாக சுங்கத் துறையினர் உதவியுடன் கரோல்பாக், காஃபர் மார்க்கெட் பகுதிகளில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

செல்போன்கள் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் தில்லியில் உள்ள 59 வியாபாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் மதிப்புக்கூட்டு வரி செலுத்தாததால், ரூ.230 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து ஒரு அதிகாரி கூறும்போது, "ஒவ்வொரு செல்போன் கருவியிலும் சர்வதேச மொபைல் அடையாள எண் இருந்தாக வேண்டும். ஆனால், 59 வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ள கருவிகளில் இந்த அடையாள எண்கள் இல்லை. இது தேசப் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாகும். இந்த வகை செல்போன்களை இறக்குமதி செய்தவர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.' என்றார்.

சர்வதேச அடையாள எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துபவர் பற்றி விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், இது போன்ற அடையாளம் காண முடியாத கருவிகளைக் கொண்டு பயங்கரவாதிகள் தொலைவிலிருந்தே குண்டுகளை வெடிக்கச் செய்ய இயலும். எனவே இவ்வகை போன்கள் இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானதாகும். இவற்றை இறக்குமதி செய்த வியாபாரிகளின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தில்லியில் உள்ள செல்போன்களில் 30 சதவீதம் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என இந்திய செல்லுலர் சங்கம் கூறுகிறது.

இது குறித்து சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மஹிந்துரு கூறியது:

"சுங்கத் துறை ஆவணங்களின்படி 2009-10ம் ஆண்டில் மட்டும் 72.88 லட்சம் போன்கள் தில்லி விமான நிலையத்தின் வழி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,380.56 கோடியாகும்.

விமானங்கள் மூலம் தருவிக்கப்பட்டு, சுங்க வரி மட்டும் கட்டி இவை இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் கறுப்புச் சந்தையில் விற்பனைக்குச் செல்கின்றன. இது போன்ற விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் லட்சக்கணக்கில் உள்ள செல்போன் கருவிகள் அனைத்திலும் அடையாள எண் உள்ளதா என சோதனை செய்வது நடக்காத காரியம். சிலர் போலி எண்களும் வைத்துள்ளனர்.

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், தாங்கள் இறக்குமதி செய்யும் கருவிகளை சில்லறை வியாபாரிகளிடம் தருகின்றனர். சில்லறை வியாபாரிகள் தாங்கள் விற்கும் எல்லா போன்களுக்கும் பில் தருவதில்லை.

ரூ.10,000க்கு மேல் விலையுள்ள போன்களில் நான்கில் ஒன்று மட்டும் தில்லியில் விற்பனையாவதாக பில் செய்யப்படும். மற்றவை தில்லிக்கு வெளியே விற்பனை செய்வதாக காட்டப்படும். இவ்வாறு செய்வதால் மதிப்பு கூட்டு வரி கட்டாமல் வரி ஏய்ப்பு நடக்கிறது,' என்று அவர் கூறினார்.

No comments: