Friday, August 5, 2011

அமெரிக்க மருத்துவமனையில் சோனியா காந்திக்கு தீவிர புற்று நோய் சிகிச்சை - டெஹல்கா தகவல். .



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சினை குறித்து சோனியா குடும்பத்தாரோ அல்லது காங்கிரஸ் கட்சியோ அல்லது மத்திய அரசோ எந்தத் தகவலையும் முழுமையாக வெளியிடாமல் ரகசியம் காப்பதால் காங்கிரஸ் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

நியூயார்க் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி. அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாக தெரிகிறது. இது நடந்ததா இல்லையா என்பதையே காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவிக்கவில்லை. முதலில் ஆபரேஷன் நடந்தது என்றார்கள், பின்னர் நடக்கப் போகிறது என்றார்கள்.

கடந்த வாரத்தில் காய்ச்சலால் அவதி

கடந்த ஒரு வாரமாகவே சோனியா காந்தியைக் காணவில்லை. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக முதலில் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை அளவுக்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திடீரென தகவல்கள் வந்துள்ளது, அதுவும் அமெரிக்காவில் போய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை போயுள்ளதை திடீரென காங்கிரஸ் தரப்பு கூறியிருப்பதால் காங்கிரஸார் குழப்பமடைந்துள்ளனர்.

அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப் படவில்லை. இதற்கிடையே டெஹல்கா இணையதளம் தனது ட்விட்டர் தகவலில் கூறுகையில், சோனியா காந்தி நியூயார்க் ஸ்லோவன் கேட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனை இது என்று தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸார் மத்தியில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

மேலும், புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் தத்தாத்ரேயுடு நோரி என்பவர் தான் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கவலைக்கிடமான நிலைக்குப் போன சோனியா

சோனியா காந்தியின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றபோதிலும் அவர் சில நாட்களுக்கு முன்பு கவலைக்கிடமான நிலைக்குப் போய் விட்டதால்தான் உடனடியாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தே ஆக வேண்டிய நிலைக்கு சோனியா காந்தியின் நிலை இருந்ததாகவும், இதையடுத்தே அவர் நியூயார்க் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து இங்கிலாந்தின் டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சோனியா காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவர் நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இருப்பினும் அவரது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் நோரி உலகப் புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஆவார். குறிப்பாக பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சையில் அவர் மிகவும் திறமையானவர். உலகளவில் புகழ் பெற்ற வெகு சில பெண்கள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் நோரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

2 ஆண்டுக்கு முன்பே சிகிச்சை பெற்றார் சோனியா

ரகசியமாக டெல்லியை விட்டு சோனியா காந்தி மருத்துவ காரணங்களுக்காக செல்வது கடந்த 2 மாதங்களில் 2வது முறையாகும். இதற்கு முன்பு அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யாருக்கும் தெரிவிக்காமல் அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்றுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட அவருக்கு என்ன பிரச்சினை என்பது தெரிவிக்கப்படவில்லை.

காங்கிரஸார் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றுள்ளார் என்று நேற்று காங்கிரஸ் தரப்பில் வெறுமனே ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அவர் திரும்பி வரும் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குழு காங்கிரஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சோனியா காந்தியுடன் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தியும், பிரியங்காவும் உடன் உள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி இன்று திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியாகாந்தியின் உடல்நலம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகாமல் இருப்பதாலும், புற்றுநோய் மருத்துவமனையில அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாலும் காங்கிரஸார் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

No comments: